விருத்தாசலம் நகராட்சியில் பட்டா மாறுதல் கேட்டு ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்


விருத்தாசலம் நகராட்சியில் பட்டா மாறுதல் கேட்டு ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 24 Jan 2019 11:00 PM GMT (Updated: 24 Jan 2019 5:09 PM GMT)

விருத்தாசலம் நகராட்சியில் பட்டா மாறுதல் கேட்டு ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட கலெக்டர் அன்பு செல்வன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடலூர், 

விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட நிலஅளவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு பட்டா மாறுதல் பணி இணையதளம் வழியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு, பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், புதுவாழ்வு மையங்கள் ஆகியவை மூலம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் அளிக்கலாம். மனுதாரர் சொத்து விவரங்கள் குறித்த அசல் ஆவணங்கள், மூல ஆவணங்கள், வில்லங்க சான்று மற்றும் தொடர்பு ஆவணங்கள் ஆகியவற்றை இந்த மையங்களில் அளிக்க வேண்டும். அவை ஸ்கேன் செய்யப்பட்டு மீண்டும் மனுதாரரிடம் உடனடியாக ஒப்படைக்கப்படும்.

மேலும், மனுவை பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புதல் சீட்டும் வழங்கப்படும். மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட விவரம் மனுதாரருக்கு செல்போனில் குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்.) மூலம் தெரிவிக்கப்படும்.

பட்டா மாறுதல் ஆணையினை பொது சேவை மையங்களில் மனுதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த பட்டாவில் கியூ ஆர் கோடு உள்ளதால் தாசில்தார் கையொப்பம் தேவையில்லை. இதன் மூலம் பொதுமக்கள் வட்ட அலுவலகம் சென்று மனு அளிப்பது தவிர்க்கப்பட்டு, தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள இ- சேவை மையங்களில் மனுக்கள் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story