கடலூரில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2,200 பேர் கைது


கடலூரில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2,200 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2019 4:30 AM IST (Updated: 24 Jan 2019 10:39 PM IST)
t-max-icont-min-icon

3-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று கடலூரில் சாலை மறியல் செய்தனர். இதில் 2,200 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர், 

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் தழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் வேலைநிறுத்த போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது.

இதற்கிடையே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கடலூருக்கு வந்து பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் திரண்டனர்.

அங்கு ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், அம்பேத்கார், இளங்கோவன், செல்வநாதன், கிருஷ்ணமூர்த்தி, சேரலாதன் ஆகியோரின் கூட்டு தலைமையில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதன்பிறகு அவர்கள் அனைவரும் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து பாரதிசாலை நோக்கி புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள், எனினும் ஒரு குழுவினர் பாரதிசாலையில் மறியலுக்கு முயன்றனர்.

அவர்களை போலீசார் அகற்றினார்கள். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுதவிர பழைய கலெக்டர் அலுவலக சாலையிலும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 1,200 பெண்கள் உள்பட 2,200 பேரை துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாண்டியன், பழனி ஆகியோர் தலைமையிலான போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச்சென்று பாரதிசாலையில் உள்ள திருமண மண்டபத்தில் காவலில் வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் நேற்று மாவட்டம் முழுவதும் 26 சதவீத அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணிக்கு வரவில்லை. இதனால் பெரும்பாலான அரசு தொடக்கப்பள்ளிகள் மூடிக் கிடந்தன. இதன்காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இதேப்போல் அரசு அலுவலகங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டன.

இதற்கிடையே நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளதால், பணிக்கு வராதவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Next Story