தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்வோம் மாநில அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை பேச்சு
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஒரு லட்சம் வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் என்று மாநில அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை பேசினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், நெல்லை-தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவருமான என்.சின்னத்துரை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர்.ஆட்சி காலத்தில் சத்துணவுத் திட்டம், கிராம தன்னிறைவுத் திட்டம், ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், குடிசை வீடுகளுக்கு மின்சாரம் தந்தார்.
காவிரி நதிநீர் பிரச்சினையில் அந்த மாநில முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழ்நாட்டு மக்களுக்கு தண்ணீரை பெற்றுத் தந்தார். அவரது மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா தலைமை ஏற்று கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்தினார். அ.தி.மு.க. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் சிறப்பாக வழிநடத்தப்பட்டது. அவர்களின் வழியில் தற்போது ஆட்சியையும், கட்சியையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வழிநடத்தி வருகின்றனர். எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அ.தி.மு.க.வையும், ஆட்சியையும் காத்திட உறுதி ஏற்போம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற வகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து ரேஷன்கார்டு தாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கப்பரிசு வழங்கினார். ஆனால், அதை தடுக்க தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் முயற்சி செய்தன. அந்த முயற்சிகளை சட்டப் போராட்டம் நடத்தி முறியடித்து தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்த பெருமை முதல்-அமைச்சருக்கு உண்டு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய நெல்லை வாகையடி முனையில் இருந்து முதல்-அமைச்சர் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இடைத்தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 2 தொகுதிகளிலும் அ.தி.மு.க அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வாகை சூடும்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் தி.மு.க.வில் உள்ளூரில் வேட்பாளர் இல்லாமல் வெளியூரில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுஉள்ளது. வேட்பாளர் என்ற பெயரில் கனிமொழி ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களை சந்திக்காமல் கட்சிக்காரர்களை வைத்து ஊராட்சி சபை கூட்டங்களை நடத்திக் கொண்டு இருக்கிறார். ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்த தி.மு.க.வுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அவரை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story