கோவில்பட்டியில் பஸ்சுக்குள் புகுந்து டிரைவர் மீது தாக்குதல் வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு


கோவில்பட்டியில் பஸ்சுக்குள் புகுந்து டிரைவர் மீது தாக்குதல் வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Jan 2019 3:45 AM IST (Updated: 24 Jan 2019 10:56 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அண்ணா நிலையத்தில் பஸ்சிற்குள் புகுந்து டிரைவரை தாக்கி விட்டு தப்பி சென்ற வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் அருப்புக்கோட்டைக்கு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சை கோவில்பட்டி ராமலிங்கம் தெருவை சேர்ந்த குருசாமி (வயது 50) ஓட்டினார். அண்ணா நிலையத்தில் இருந்து பஸ் வெளியே வந்தபோது, வாலிபர் ஒருவர் பஸ்சின் பக்கவாட்டை தட்டியவாறு ஓடிச் சென்று ஏறினார்.

பின்னர் அவர், டிரைவரிடம் சென்று, என் மீது எதற்காக மோதுவது போன்று பஸ்சை ஓட்டி வந்தாய்? என்று கூறி, அவருடைய கையை பிடித்து இழுத்து தகராறு செய்து தாக்கினார். இதில் குருசாமியின் கையில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது.

உடனே பஸ்சில் இருந்த கண்டக்டர், பயணிகள் அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களிடம் சிக்காமல் பஸ்சில் இருந்து கீழே குதித்து அந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அந்த பஸ் அங்கேயே நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து கோவில்பட்டி அண்ணா நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்க மறுத்து அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் ரமேசன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து பஸ்கள் இயக்கப்பட்டன. இதுகுறித்து டிரைவர் குருசாமி அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரைவரை தாக்கிய வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story