அனல்மின் நிலையம் அமைக்கும் பணிக்கு பாறாங்கல் ஏற்றிச்சென்ற 2 லாரிகள் சிறைபிடிப்பு மெஞ்ஞானபுரத்தில் பரபரப்பு
உடன்குடி அனல்மின் நிலையம் அமைக்கும் பணிக்கு பாறாங்கல் ஏற்றிச் சென்ற 2 லாரிகளை மெஞ்ஞானபுரத்தில் பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
மெஞ்ஞானபுரம்,
உடன்குடியில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அனல்மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை கப்பல் மூலம் கொண்டு வரும் வகையில், கல்லாமொழியில் நிலக்கரி இறங்குதளம் அமைக்கப்படுகிறது. இதற்காக அங்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் லாரிகளில் பாறாங்கற்களை மெஞ்ஞானபுரம், திருச்செந்தூர் வழியாக கொண்டு செல்கின்றனர்.
அதிக டன் எடையுடன் கனரக வாகனங்கள் செல்வதால், மெஞ்ஞானபுரத்தில் சாலை உருக்குலைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இதனால் இந்த சாலை வழியாக அதிக எடை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் செல்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனாலும் தொடர்ந்து கனரக வாகனங்களில் பாறாங்கற்கள் ஏற்றி செல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மெஞ்ஞானபுரம் பஜார் வழியாக பாறாங்கற்கள் லோடு ஏற்றிக்கொண்டு 2 லாரிகள் சென்றன. அந்த 2 லாரிகளையும் பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. உடனே மெஞ்ஞானபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அதிக பாரம் ஏற்றிச் சென்ற 2 லாரிகளுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் பிடியில் இருந்து லாரிகள் மீட்கப்பட்டன. மேலும், இந்த சாலை வழியாக பாறாங்கல் ஏற்றிய லாரிகள் வந்தால் மீண்டும் சிறைபிடிப்போம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story