பாசனத்திற்கு திறக்கப்பட்டதால் வைகை அணை நீர்மட்டம் 54 அடியாக குறைந்தது


பாசனத்திற்கு திறக்கப்பட்டதால் வைகை அணை நீர்மட்டம் 54 அடியாக குறைந்தது
x
தினத்தந்தி 24 Jan 2019 10:45 PM GMT (Updated: 24 Jan 2019 6:47 PM GMT)

பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் 54 அடியாக குறைந்துள்ளது.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை கடந்த ஆண்டு 2 முறை முழுக்கொள்ளளவை எட்டிய நிலையில் அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை தேனி மாவட்டத்தில் போதிய அளவு பெய்யாத நிலையில், வைகை அணைக்கான நீர்வரத்து கிடுகிடுவென சரிந்தது.

பாசனத்திற்காக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், வைகை அணை நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து முறை வைத்து பாசனத்திற்கு அவ்வப்போது தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வைகை அணையை பொறுத்த வரையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மட்டுமே பிரதான நீர்ஆதாரமாக விளங்குகிறது.

இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்ததால், அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்தது. இதனால் வைகை அணைக்கான நீர்வரத்து தற்போது அடியோடு நின்றுவிட்டது. தற்போதைய நிலையில் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 54 அடியாக குறைந்து காணப்படுகிறது.

வைகை அணையில் 15 அடி முதல் 20 அடி வரையில் வண்டல் மண் படிந்து இருப்பததால் அணையில் குறைந்த அளவு தண்ணீரே இருப்பு உள்ளது. மதுரை மாநகர மக்களின் குடிநீர் ஆதாரமாக வைகை அணை விளங்குவதால், குடிநீர் தேவைக்கும், பாசனத்திற்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து பொதுப்பணித்துறையினர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 54.07 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில் அணையில் இருந்து மதுரை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 60 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் மொத்த நீர்இருப்பு 2 ஆயிரத்து 570 மில்லியன் கனஅடியாக காணப்பட்டது.

Next Story