கூடலூர் அருகே அட்டகாசம் தென்னை மரத்தை வேரோடு சாய்த்த யானை


கூடலூர் அருகே அட்டகாசம் தென்னை மரத்தை வேரோடு சாய்த்த யானை
x
தினத்தந்தி 24 Jan 2019 11:00 PM GMT (Updated: 24 Jan 2019 6:47 PM GMT)

கூடலூர் அருகே தென்னை மரத்தை வேரோடு சாய்த்து காட்டுயானை அட்டகாசம் செய்தது. மின்கம்பம் மீது தென்னை மரம் விழுந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கூடலூர்,

கூடலூர் தாலுகா மரப்பாலம் அருகே புளியாம்பாரா உள்பட பல்வேறு குக்கிராமங்கள் உள்ளன. இதன் கரையோரம் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் வெளியேறி அடிக்கடி ஊருக்குள் வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு புளியாம்பாரா பகுதியில் நிறுத்தி வைத்திருந்த கார் ஒன்றை காட்டுயானை சேதப்படுத்தியது.

காட்டுயானை வருகையை கட்டுப்படுத்த வனத்துறையினர் இரவில் ரோந்து பணி மேற்கொண்டு கண்காணித்து வந்தனர். இதனால் அதன் வருகை குறைந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நள்ளிரவில் காட்டுயானை ஒன்று மீண்டும் அப்பகுதியில் நுழைந்து வாழை, பாக்கு, தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து உள்ளனர்.

நேற்று நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த அந்த காட்டுயானை, அப்பகுதியில் நின்றிருந்த தென்னை மரத்தை வேரோடு சாய்த்து அட்டகாசம் செய்தது. அப்போது தென்னை மரம் மின்கம்பிகள் மீது விழுந்தது. இதில் மின்கம்பிகள் அறுந்து கிராமப்புறங்களில் மின்சாரம் அடியோடு துண்டித்தது. இது குறித்து பொதுமக்கள் வனத்துறை மற்றும் மின்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு வந்த தேவாலா வனத்துறையினரும், பொதுமக்களும் இணைந்து காட்டுயானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேரத்துக்கு பிறகு காட்டுயானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.

இதனிடையே தென்னை மரம் சாய்ந்து அறுந்த மின்கம்பிகளை மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்தனர். காட்டுயானை வருகையால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

Next Story