வேதாரண்யத்தில் உப்பு உற்பத்திக்கான ஆரம்ப கட்ட பணிகள் தீவிரம் புயல் பாதிப்புக்கு பிறகு படிப்படியாக சீராகும் உப்பளங்கள்


வேதாரண்யத்தில் உப்பு உற்பத்திக்கான ஆரம்ப கட்ட பணிகள் தீவிரம் புயல் பாதிப்புக்கு பிறகு படிப்படியாக சீராகும் உப்பளங்கள்
x
தினத்தந்தி 25 Jan 2019 4:30 AM IST (Updated: 25 Jan 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

புயல் பாதிப்புக்கு பிறகு வேதாரண்யத்தில் உப்பளங்கள் படிப்படியாக சீராகி வருகின்றன. அங்கு உப்பு உற்பத்திக்கான ஆரம்ப கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வேதாரண்யம்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றான நாகை மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடித்தல் ஆகியவை முக்கிய தொழில்களாக உள்ளன. அதேபோல உப்பு உற்பத்தியும் அதிக வருமானம் தரும் தொழிலாக உள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் உப்பு உற்பத்திக்கு பெயர் பெற்ற ஊராகும்.

தமிழ்நாட்டில் உப்பு உற்பத்தியில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக திகழ்கிறது வேதாரண்யம். இங்கு உற்பத்தியாகும் உப்பு ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

ஒரு ஆண்டுக்கு 6 லட்சம் டன் உப்பு வேதாரண்யத்தில் உற்பத்தியாகிறது. உப்பளங்கள் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். கடந்த ஆண்டு(2018) நவம்பர் மாதம் வேதாரண்யத்தில் கரையை கடந்த கஜா புயல் உப்பளங்களை சிதைத்து விட்டது.

கஜா புயலின்போது உப்பளங்களில் கடல் சேறு அதிக அளவில் சேர்ந்து விட்டது. உப்பளங்களில் 1 அடிக்கு மேல் கடல் சேறு சேர்ந்து விட்டதால் உப்பு உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதியில் உள்ள உப்பளங்களை கடந்த வாரம் மத்திய அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். புயலின் பாதிப்புக்கு பிறகு உப்பளங்களை சீரமைக்கும் பணிகளில் உப்பு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் உப்பளங்கள் படிப்படியாக சீராகி வருகின்றன.

தற்போது வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வெயில் சுட்டெரிப்பதால், நடப்பு ஆண்டு உப்பு உற்பத்தியை தொடங்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் உப்பு உற்பத்தியாளர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

உப்பளங்களில் உள்ள கால்வாய்களில் இருந்து சேற்றை அகற்றுதல், உப்பு சேகரிக்கும் பகுதியை சுத்தம் செய்தல், பாத்திகளில் வரப்புகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் உப்பள தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணிகளை விரைந்து முடித்து உப்பு உற்பத்தியை தொடங்க இருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். 

Next Story