தேர்தலில் இனி போட்டியிட போவதில்லை கிரண்பெடி விளக்கம்
தேர்தலில் இனி போட்டியிட போவதில்லை என்று கவர்னர் கிரண்பெடி விளக்கம் அளித்தார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடி நாள்தோறும் அரசு அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வரிசையில் நேற்று தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார்.
அப்போது அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் அமருவதற்கு போடப்பட்டிருந்த நாற்காலிகள் உடைந்த நிலையிலும் சுத்தமில்லாமலும் இருப்பதை கண்ட அவர் அவற்றை உடனடியாக அகற்றிவிட்டு வேறு நாற்காலிகளை அமைக்க உத்தரவிட்டார். துறை சார்பில் நிறைவேற்றப்படும் திட்ட நிதியுதவிகள் சரியான நபர்களுக்கு சென்று சேரவும், உதவிகள் எந்த நோக்கத்துக்காக அளிக்கப்படுகிறதோ? அந்த நோக்கம் நிறைவேறுகிறதா? என்பதை கண்காணிக்கவும் உத்தரவிட்டார்.
திருமண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சிகளில் துறை ஆய்வாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
ஆய்வு முடிந்ததும் அவரிடம் நிருபர்கள், நீங்கள் ஆந்திராவுக்கு மாற்றப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகிறதே?, தேர்தலில் போட்டியிட போகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து கவர்னர் கிரண்பெடி கூறியதாவது:-
நான் ஆந்திராவுக்கு மாற்றம் செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. அதுபோன்ற வதந்தி பரவுவதில் தவறு ஏதும் இல்லை.
இனி எப்போதும் நான் தேர்தலில் போட்டியிட போவதில்லை. நான் எப்போதும் நிர்வாகியாகவே இருக்க விரும்புகிறேன். நான் ஒரு அரசியல்வாதி அல்ல. இதனால் தேர்தலில் யாருடனும் மோத விரும்பவில்லை.
இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார்.
Related Tags :
Next Story