அரசு ஊழியர்-ஆசிரியர்கள் 2-வது நாளாக சாலை மறியல் பெண்கள் உள்பட 2,600 பேர் கைது


அரசு ஊழியர்-ஆசிரியர்கள் 2-வது நாளாக சாலை மறியல் பெண்கள் உள்பட 2,600 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2019 4:15 AM IST (Updated: 25 Jan 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் அரசு ஊழியர்-ஆசிரியர்கள் நேற்று 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 2 ஆயிரத்து 600 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை, 

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக் டோ- ஜியோ சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். முதல் நாளாக 22-ந்தேதி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. நேற்று முன்தினம் நெல்லை தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது.

நேற்று 2-வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடந்தது. பல்வேறு ஊர்களில் வேலை செய்யும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நெல்லை தாலுகா அலுவலகத்துக்கு காலை 10 மணி முதல் வரத்தொடங்கினர். அங்கு அவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது புதிய ஓய்வூதிய திட்டம் என்று எழுதப்பட்ட ஒரு பாடையை ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தூக்கி வந்தனர். அதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அந்த பாடையை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்பிறகு தொடர்ந்து போராட்டம் நடந்தது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பால்ராஜ், பார்த்தசாரதி, பாபுசெல்வன், ஆரோக்கிய ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மணிமேகலை, நாகராஜன், எட்வர்ட் ஜெபசீலன், அருள் ஜார்ஜ் பீட்டர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

அப்போது அவர்கள் கூறும்போது, “சென்னை ஐகோர்ட்டு ஆசிரியர்களை பள்ளிக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. இந்த வழக்கு வருகிற 28-ந்தேதி ஐகோர்ட்டு மதுரை கிளையில் விசாரணைக்கு வருகிறது. எங்கள் தரப்பு கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். உயர்மட்ட குழு உறுப்பினர்களை அரசு அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்“ என்றனர்.

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் சாலையில் உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் சில நிர்வாகிகளை குண்டுகட்டாக தூக்கி சென்று போலீஸ் வேனில் ஏற்றினர்.

மறியலில் ஈடுபட்ட 1,235 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 780 பேர் பெண்கள் ஆவார்கள். கைது செய்யப்பட்டவர்கள் நெல்லை சந்திப்பில் உள்ள 3 திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், கார்கள், ஆட்டோக்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன. சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த போராட்டத்தையொட்டி நெல்லை தாலுகா அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பு நேற்று 2-வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடந்தது. உயர்மட்ட குழு உறுப்பினர் துரைசிங், பிச்சைக்கனி ஆகியோர் தலைமை தாங்கினர். சண்முக சுந்தரம், மாரியப்பன், மல்லிகா, இப்ராகிம் மூசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கரி மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மறியலில் ஈடுபட்ட 1,365 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், 976 பேர் பெண்கள் ஆவார்கள்.

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி ஆகிய 2 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 600 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story