தஞ்சை மாவட்டத்தில் 2–வது நாளாக மறியல்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,850 பேர் கைது


தஞ்சை மாவட்டத்தில் 2–வது நாளாக மறியல்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,850 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2019 4:30 AM IST (Updated: 25 Jan 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் 2–வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 1,850 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ– ஜியோ) சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 22–ந்தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 3–வது நாளாக இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

1–4–2003–க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டுவரும் அநீதி களையப்பட வேண்டும். கல்லூரி பேராசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள பணி மேம்பாடு உடனடியாக வழங்கிட வேண்டும்.

21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனே வழங்கிட வேண்டும். 3,500 தொடக்கப்பள்ளிகளை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், 3,500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 66 அரசு தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10 ஆயிரத்து 900 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் 5 ஆயிரத்து 978 பேர் நேற்று பணிக்கு வரவில்லை. இது 55 சதவீதம் ஆகும். அரசு ஊழியர்கள் மொத்தம் 16 ஆயிரத்து 580 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 1,954 பேர் பணிக்கு வரவில்லை.

தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 27 ஆயிரத்து 480 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 7ஆயிரத்து 932 பேர் நேற்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இது 29 சதவீதம் ஆகும்.

வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 2–வது நாளாக மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி தஞ்சை ரெயில் நிலையம் அருகே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் 1,200 பெண்கள் உள்பட 1,850 பேர் கைது செய்யப்பட்டனர். மறியல் போராட்டத்தையொட்டி ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.


Next Story