அறிவியல் தொழில்நுட்பம் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பிரதமர் மோடி நடவடிக்கை மத்திய மந்திரி ஹர்ஷ வர்த்தன் பேச்சு
அறிவியல் தொழில்நுட்பம் மூலம் நாட்டின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று மத்திய மந்திரி ஹர்ஷ வர்த்தன் கூறினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி கடற்கரையில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் ரூ.25 கோடி செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் செயற்கை மணல் பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மணல் பரப்பை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலகம் எதிரே நடந்தது.
விழாவிற்கு கவர்னர் கிரண்பெடி தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செயற்கை மணல் பரப்பை மத்திய மந்திரி ஹர்ஷ வர்த்தன் பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார். அவர் பேசியதாவது:-
அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்த நாடுகள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியா இடம் பிடித்துள்ளது. 2004-ம் ஆண்டு சுனாமி வந்தபோது இந்தியாவில் லட்சக் கணக்கான மக்கள் உயிரிழந்தனர். ஆனால் தற்போது (2019) சுனாமி வருவதை முன்கூட்டியே துல்லியமாக கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கும் தொழில்நுட்பத்தை கொண்ட 3 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
புயல் உள்ளிட்ட வானிலை அறிவிப்புகளை வெளியிடுவதில் உலக அளவில் 4-வது சிறந்த நாடாக இந்தியா உள்ளது. நானோ தொழில்நுட்பத்தில் 4-வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார வளர்ச்சி 14 சதவீதமாக உள்ளது. உலக அளவில் இது 4 சதவீதமாகத்தான் உள்ளது.
உலக அளவில் அரசு நிதியை பெற்று இயங்கும் 12 ஆயிரம் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இந்திய அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் (சி.எஸ்.ஐ.ஆர்.) 9-ஆவது இடத்தை பிடித்துள்ளது. மீனவர்களுக்கு வானிலை அறிவிப்புகளை செல்போன் செயலி மூலம் தெரிவித்து வருகிறோம். கடலில் எந்த இடத்தில் அதிக மீன்கள் உள்ளன என்பதை இதன்மூலம் அறிந்துகொள்ளலாம்.
பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் தினமும் கடைபிடிக்க வேண்டிய 700 வகையான பசுமை ஒப்பந்தங்கள் கொண்ட இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அறிவியல் தொழில்நுட்பம் மூலம் நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக தான் புதுச்சேரியில் நவீன தொழில்நுட்பம் மூலம் செயற்கை கடற்கரை உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கே முன்மாதிரியான தொழில்நுட்பமாக விளங்கும். 2030-ல் உலக அறிவியல் வல்லரசு நாடுகளில் முதல் மூன்று இடங்களுக்குள் இந்தியா நிச்சயம் வந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் அமைச்சர் கந்தசாமி, தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story