ராமநாதபுரத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மறியல்; 2 ஆயிரம் பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டத்தில் 3-வது நாளாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்ட 2 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம்,
தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் போன்றவற்றை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது போன்ற 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அடங்கிய ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2 நாட்களாக தாலுகா தலைநகரங்களில் மறியலில் ஈடுபட்டு கைதாகி வந்த கூட்டமைப்பினர் நேற்று தங்களின் போராட்டத்தின் தொடர்ச்சியாக கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் மறியல் போராட்டத்தினை நடத்தினர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். இதன்படி மறியலில் ஈடுபட்டதாக 1,351 பெண்கள் உள்பட 2,003 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ராமநாதபுரம் நகரில் உள்ள 8 திருமண மண்டபங்களில் தங்க வைக்கப் பட்டனர். மறியல் போராட்டம் நடைபெற்றதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கண்ணன், வெள்ளைத்துரை ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நேற்றும் அலுவலக பணிகளிலும், கல்வி பணியிலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. முழுஆண்டு தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வரும் வேளையில் இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பள்ளிகள் செயல்படாததால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டது.
முக்கிய அரசுத்துறை அலுவலகங்கள் உள்பட பெரும்பாலான அலுவலகங்கள் செயல் படாததால் அரசு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டதோடு, மக்களின் அரசு சார்ந்த பணிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அரசின் வளர்ச்சி திட்ட பணிகளிலும், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
மாவட்டத்தில் நடைபெற்ற 3-வது வேலைநிறுத்த போராட்டத்தின்போது கடந்த 2 நாட்களை காட்டிலும் அதிகஅளவிலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதன்படி மாவட்டத்தில் 6,325 பேர் பணியில் ஈடுபடாமல் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளதாகவும், இது 35.94 சதவீதம் என்றும் அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story