காக்காமுட்டை சினிமா பாணியில் ரெயில் பயணிகளிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது
காக்காமுட்டை சினிமா பாணியில் ரெயில்பயணிகளிடம் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணம்,
காக்கா முட்டை சினிமா படத்தில் 2 சிறுவர்கள் ரெயில்களின் படிக்கட்டுகளில் செல்போன் பேசி கொண்டு பயணம் செய்யும் பயணிகளை கம்பால் தாக்கி செல்போனை பறித்து செல்லும் காட்சி இடம் பெற்று இருந்தது. அரக்கோணம் ரெயில் நிலையம் பகுதியில் சில வாலிபர்கள், சிறுவர்கள் இதேபோல் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அரக்கோணத்தை அடுத்த சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 23), இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் படிக்கட்டு ஓரமாக செல்போன் பேசியபடி சென்று கொண்டிருந்தார். புளியமங்கலம் அருகே ரெயில் பாதை ஓரமாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் நீளமான கம்பால் சங்கரின் கையில் அடித்து ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றார்.
இதேபோல் வேலூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (24) கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரக்கோணத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரெயிலில் பயணம் செய்தபோது மங்கம்மாபேட்டை அருகே ராமகிருஷ்ணன் கையில் கம்பால் தாக்கி ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை வாலிபர் ஒருவர் பறித்து சென்றார்.
இதுகுறித்து சங்கர், ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் அரக்கோணம் ரெயில்வே போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் பச்சையம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு மற்றும் போலீசார் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் அரக்கோணம், பழனிப்பேட்டை பகுதியை சேர்ந்த பொன்மணி (23) என்பதும், ரெயில்களில் படிக்கட்டில் அமர்ந்து செல்போன் பேசி கொண்டு பயணம் செய்யும் பயணிகளை கம்பால் தாக்கி செல்போனை பறித்து சென்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story