குடியாத்தம் ரெயில்வே மேம்பால தடுப்பு சுவரில் மோதி 40அடி பள்ளத்தில் விழுந்த 3 வாலிபர்கள் பலி மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம்
குடியாத்தம் ரெயில்வே மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி மோட்டார் சைக்கிளோடு 40 அடி பள்ளத்தில் விழுந்த 3 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குடியாத்தம்,
பள்ளிகொண்டாவில் இருந்து நேற்று இரவு 10.30 மணியளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் குடியாத்தம் நோக்கி சென்றனர். குடியாத்தம் ரெயில்வே மேம்பாலத்தில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மேம்பால தடுப்புச்சுவரில் மோதியது. இதில் சுமார் 40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து மோட்டார்சைக்கிள் கீழே விழுந்தது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 வாலிபர்களும் படுகாயம் அடைந்தனர். வாலிபர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலக்கண்ணன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்ப முயன்றனர்.
ஆனால் படுகாயம் அடைந்த வாலிபர்கள் 3 பேரும் உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் பள்ளிகொண்டா செல்லியம்மன்நகரை சேர்ந்த ஜெயசீலன் மகன் பிரதீப் (வயது 20), பள்ளிக்கூட தெருவை சேர்ந்த சரவணன் மகன் நவீன் (20), அய்யாவூநகரை சேர்ந்த சேட்டு மகன் அபிநாஸ் (20) என்பதும், 3 பேரும் நண்பர்கள் என தெரிய வந்தது.
Related Tags :
Next Story