கொடைக்கானலில் விதிகளை மீறி கட்டப்பட்ட 39 கட்டிடங்களின் மின் இணைப்பு துண்டிப்பு


கொடைக்கானலில் விதிகளை மீறி கட்டப்பட்ட 39 கட்டிடங்களின் மின் இணைப்பு துண்டிப்பு
x
தினத்தந்தி 25 Jan 2019 4:30 AM IST (Updated: 25 Jan 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் விதிகளை மீறி கட்டப்பட்ட 39 கட்டிடங்களின் மின் இணைப்பை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அதிகாரிகள் துண்டித்தனர்.

கொடைக்கானல்,

கொடைக்கானலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நகரமைப்பு வரைபடம் தொடர்பான மாஸ்டர் பிளானை மாற்ற வேண்டும். கடந்த 1993-ம் ஆண்டிற்கு பிறகு மாஸ்டர் பிளான் இதுவரை மாற்றப்படவில்லை. கடந்த 1984-88-ம் ஆண்டின் மக்கள் தொகை, சுற்றுலாப்பயணிகளின் வருகை அடிப்படையில் அந்த மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டது. 1999-ல் தயாரிக்கப்பட்ட புதிய மாஸ்டர் பிளானுக்கு இதுவரை அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் தற்போது சுற்றுலாப்பயணிகளின் வருகை பல மடங்கு அதிகரித்து வருகிறது.

இதற்கேற்ப அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது அவசியம். ஆனால் விதிகளை மீறி கட்டிடம் கட்டியுள்ளதாக கூறி நோட்டீஸ் அனுப்புவது, சீல் வைப்பது போன்ற பணிகளில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். எனவே, புதிய மாஸ்டர் பிளான் அமலாகும் வரை நோட்டீஸ் அனுப்பவும், சீல் வைக்கவும் தடை விதிக்க வேண்டும் என பலர் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த மனுக்கள் ஏற்கனவே ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, கொடைக்கானலுக்கான புதிய மாஸ்டர் பிளான் திட்டம் 3 மாதங்களில் இறுதி செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நகராட்சி சார்பாக விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை கண்டறிந்து அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தனர். இதனை பதிவு செய்த நீதிபதிகள் விதிமுறைகளை மீறி கட்டிய கட்டிடங்களின் மின் இணைப்பை இன்றே(அதாவது நேற்று) துண்டித்து நகராட்சி ஆணையர் மற்றும் மின்வாரிய செயற்பொறியாளர் ஆகியோர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை இன்று(வெள்ளிக் கிழமை) ஒத்திவைத்தனர்.

இதைத்தொடர்ந்து கொடைக்கானல் கோட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மேத்யூ தலைமையில் உதவி பொறியாளர்கள் குமார், அழகர்சாமி உள்பட மின்வாரிய ஊழியர்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போலீசார் உதவியுடன் 2 குழுக்களாக சென்று கொடைக்கானல் மூஞ்சிக்கல், அண்ணாசாலை, லேக் ரோடு, நாயுடுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 39 கட்டிடங்களின் மின் இணைப்பை துண்டித்தனர். இந்த சம்பவம் கொடைக்கானல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story