கலெக்டர் அலுவலகம் அருகே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டம் 2,134 பேர் கைது


கலெக்டர் அலுவலகம் அருகே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டம் 2,134 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2019 4:30 AM IST (Updated: 25 Jan 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2,134 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் கடந்த 22-ந்தேதி தொடங்கியது.

அன்றைய தினம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாலுகா அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 23-ந்தேதி தாலுகா அளவில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். 3-வது நாளான நேற்று மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலை 9 மணியில் இருந்தே குவிய தொடங்கினார்கள். பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புதிய கலெக்டர் அலுவலகத்தின் முன்பகுதி வரை அவர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு நின்றனர். பதாகைகளை ஏந்திய படி ஊர்வலமாகவும் சென்றனர். பெரும்பாலான ஆசிரியைகள் சாலையில் அமர்ந்தனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து வாகனங்களை வேறு பாதை யில் திருப்பி விட்டனர்.

மறியல் போராட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர்கள் நீலகண்டன், மணிமாறன், சந்திரசேகரன், வளன் அரசு ஆகியோர் தலைமை தாங்கினார்கள். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசே ஆசிரியர், அரசு ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்து என்பன உள்ளிட்ட கோஷங்களை முழங்கினார்கள். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திருச்சி மாநகர துணை போலீஸ் கமிஷனர் மயில்வாகனன் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்தனர். மொத்தம் 2,134 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 1,293 பேர் ஆசிரியைகள் ஆவார்கள்.

அணி, அணியாக கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் 25 டவுன் பஸ்களில் ஏற்றப்பட்டு கண்டோன்மெண்ட், தில்லைநகர், புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள 7 திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டத்தினால் கலெக்டர் அலுவலக பகுதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பரபரப்புடன் காணப்பட்டது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பெரும்பாலான அரசு பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அரசு அலுவலகங்களும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. 

Next Story