கோவை டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டிற்கு தீ வைத்த மர்ம ஆசாமிகள்
திருடவந்த இடத்தில் பணம், நகை கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த மர்ம ஆசாமிகள் கோவை டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டிற்கு தீவைத்தனர். இதில், ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டி அருள்ஜோதி நகரை சேர்ந்தவர் குமார் (வயது 44). இவர் கோவை அருகே கருமத்தம்பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அம்சவேணி. என்ஜினீயரான இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இதன் காரணமாக சரவணம்பட்டியில் உள்ள வீட்டில் குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வாரத்தில் 2 நாட்கள் சூளேஸ்வரன்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டின் உள்ளே தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து அக்கம், பக்கத்தினர் அதே பகுதியில் ஆண்டாள் வீதியில் வசித்து வரும் குமாரின் மாமனார் ரங்கசாமிக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் தேக்கு மரபொருட்கள், கட்டில், மெத்தை, பட்டுப்புடவைகள், கணினி, டி.வி., குளிர்சாதன பெட்டி உள்பட ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. பான்கார்டு, ஆதார் அட்டை மற்றும் சான்றிதழ்கள், ஆவணங்கள் தீயில் கருகின. கியாஸ் நிரப்பிய சிலிண்டர் வீட்டிற்கு வெளியே இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட் டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குமார், சூளேஸ்வரன்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்தார். பின்னர் இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் வீட்டின் முன்பக்கம் உள்ள இரும்பு கேட்டின் பூட்டு மற்றும் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும், திருடவந்த இடத்தில் நகை, பணம் எதுவும் சிக்காததால் ஆத்திரம் அடைந்த மர்ம ஆசாமிகள் வீட்டிற்கு தீவைத்து சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:- கோவை டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம ஆசாமிகள் அங்கிருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து, மது ஊற்றி குடித்து உள்ளனர். மேலும் சட்னி அரைக்க வைத்திருந்த பொட்டுக்கடலையை சாப்பிட்டு உள்ளனர். அதன்பிறகு பீரோவில் இருந்த பொருட்களை வெளியே போட்டு விட்டு, நகை, பணம் இருக்கிறதா? என்று தேடி பார்த்து உள்ளனர். ஆனால் அங்கு நகை, பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் வீட்டிற்கு தீவைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
பீரோ உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து விட்டதால், கைரேகை பதிவுகளை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் வீட்டிற்கு தீவைத்த மர்ம ஆசாமிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே, அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து வருகிறோம். தடயங்களை அழிக்க வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை விரைவில் பிடித்து விடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story