மோடியின் அரசு சாமானிய மக்களுக்கு எதிராக இருக்கிறது
மோடியின் அரசு சாமானிய மக்களுக்கு எதிராக இருக்கிறது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய்தத் கூறினார்.
காங்கேயம்,
திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கு சக்தி செயலி குறித்த பயிற்சி முகாம் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் காங்கேயம் பஸ்நிலையம் அருகே ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. முகாமிற்கு மாவட்ட தலைவர் ப.கோபி தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், மேலிட பொறுப்பாளருமான சஞ்சய்தத் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் கலந்துரையாற்றினார்.
கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் அருள்பெத்தையா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.சரவணன், வட்டார காங்கிரஸ் தலைவர் சத்தியநாதன், நகர காங்கிரஸ் தலைவர் சிபக்கத்துல்லா, நகர செயல் தலைவர் குணசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிரியங்கா காந்திக்கு கட்சியில் பொறுப்பு வழங்கியதற்கு கட்சியினர் மகிழ்ச்சி தெரிவித்து பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.
முன்னதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய்தத் நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் ஆட்சியின் போது போடப்பட்ட ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை மோடி தலைமையிலான அரசு மாற்றி, விமானங்களை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்து ஊழல் செய்துள்ளனர். இந்த விமான ஒப்பந்தம் தொடர்பான பணிகளை ஒப்பந்தத்தில் உள்ளது போல இந்துஸ்தான் ஏரோ நாட்டிக் நிறுவனத்துக்கு கொடுக்காமல், முறைகேடாக முன் அனுபவம் இல்லாத அம்பானி நிறுவனத்துக்கு கொடுத்துள்ளனர்.
மோடியின் ஆட்சி கோடீஸ்வரர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் தான் சாதகமாக இருக்கிறதே தவிர, சாமானிய மக்களுக்கு எதிராகவே இருக்கிறது. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வமும் தொடர்ந்து ஊழல் புகாருக்கு உள்ளாகி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே போல் தாராபுரத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் மற்றும் சக்தி செயலி குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வக்கீல் தென்னரசு தலைமை தாங்கினார். காளிமுத்து எம்.எல்.ஏ., மாநில துணைத்தலைவர் எம்.என்.கந்தசாமி, மாநில பொதுச்செயலாளர் அருள்பெத்தையா, நிர்வாகிகள் கோவிந்தராஜ், ஜெயன், பிரனீஸ்பாலு, ஜோதிகுமார், முருகானந்தம், பாலு, செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சஞ்சய்தத் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியின் சக்தி செயலி திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
வரும் காலங்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, வாக்குச்சாவடி அளவில் செயல்படும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதற்காகத்தான் இந்த சக்தி செயலி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் தலா 20 பேரை இந்த திட்டத்தில் இணைக்க வேண்டும். இந்த திட்டத்தில் இணைப்பதற்கு வாக்காளர் அடையாள எண்ணை செல்போனில் டைப் செய்து, கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் போதும்.
அவ்வாறு பதிவு செய்யப்பட்டவர்களுடன் ராகுல்காந்தி நேரடியாக தொடர்பு கொள்வார். பிரிங்கா காந்தியின் வருகையை மக்கள் பெரிதும் வரவேற்கிறார்கள். விரைவில் மோடியின் ஆட்சி மக்களால் தூக்கி எறியப்பட்டு, நாட்டின் பிரதமராக ராகுல்காந்தி பொறுப்பேற்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story