ரோந்து செல்லும் போலீசாருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வரை போக்குவரத்து படி - ஐகோர்ட்டு உத்தரவு
ரோந்து செல்லும் போலீசாருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வரை போக்குவரத்து படி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
வாகனங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடும் போலீசாருக்கு உரிய போக்குவரத்து பயணப்படி வழங்கப்படுவதில்லை என்று பத்திரிகைகளில் வந்த செய்தியின் அடிப்படையில் மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்தது. அந்த வழக்கில் கூறி இருப்பதாவது:-
ரோந்துப்பணிகளில் ஈடுபடும் போலீசாருக்கு உரிய போக்குவரத்து படிகள் வழங்கப்படுவதில்லை என செய்தி வெளியாகியுள்ளது. ஒவ்வொரு போலீஸ்நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்காக அவர்கள் இரு சக்கர அல்லது 4 சக்கர வாகனங்களில் செல்வார்கள். இதற்கான படிகள் வழங்கப்படாததால் போலீசார் தங்களின் ஊதியத்தை செலவிடும் நிலை உள்ளது. போலீசார் லஞ்சம் பெறுவதாக புகார்கள் எழுவது அடிக்கடி நடந்து வரும் சூழ்நிலையில் இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
ரோந்து பணிகளில் ஈடுபடுவதை போலீசார் தவிர்த்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே ரோந்து பணிகளில் ஈடுபடும் போலீசாருக்கு உரிய போக்குவரத்து படியை வழங்க நடவடிக்கை எடுப்பது அவசிய மானது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
கிராமம் மற்றும் நகரங்களில் ரோந்து பணிக்கு செல்லும் போலீசாருக்கு ரோந்து பகுதிகள், வாகனம், எரிபொருள் செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு போக்குவரத்து படி நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
மாதம் குறைந்தபட்சம் ரூ.1,500 முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை போக்குவரத்து படி வழங்க வேண்டும் என இந்த கோர்ட்டு கருதுகிறது. ரோந்து பகுதி, போக்குவரத்து செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு போக்குவரத்து படியை அதிகாரிகள் நிர்ணயம் செய்யலாம். இது தொடர்பாக உள்துறை செயலாளர் 2 மாதத்துக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story