3-வது நாளாக சாலை மறியல் போராட்டம்: அரசு ஊழியர்-ஆசிரியர்கள் 2,367 பேர் கைது


3-வது நாளாக சாலை மறியல் போராட்டம்: அரசு ஊழியர்-ஆசிரியர்கள் 2,367 பேர் கைது
x
தினத்தந்தி 26 Jan 2019 4:30 AM IST (Updated: 25 Jan 2019 9:24 PM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 3-வது நாளாக நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 2 ஆயிரத்து 367 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, 

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். கடந்த 22-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 3-வது நாளாக நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தையொட்டி பல ஊர்களில் வேலை செய்யும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு காலை 10 மணி முதல் வரத்தொடங்கினர். பின்னர் அங்கு அவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பால்ராஜ், பார்த்தசாரதி, பாபுசெல்வன், ஆரோக்கியராஜ் , மாரிராஜா, சார்லஸ் நீல் ஆகியோர் தலைமை தாங்கினர். உயர்மட்ட குழு உறுப்பினர் நாகராஜன் போராட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மறியல் ஈடுபட்ட 633 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 323 பேர் பெண்கள் ஆவார்கள். கைது செய்யப்பட்டவர்கள் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

தென்காசி யூனியன் அலுவலகம் முன்பு நேற்று மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட 1002 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 734 பேர் பெண்கள். இதேபோல் சங்கரன்கோவில் பயணியர் விடுதி முன்பு மறியலில் ஈடுபட்ட 732 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், 465 பேர் பெண்கள் ஆவார்கள். நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 367 பேர் கைது செய்யப்பட்டனர்.அரசு ஊழியர்கள் போராட்டம் காரணமாக மாவட்ட கலெக்டர் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அங்கு எந்த பணிகளும் நடைபெறவில்லை. பணிகள் தேங்கின. பொதுமக்கள் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி, சேரன்மாதேவி, வள்ளியூர், சங்கரன்கோவில் என 5 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த கல்வி மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 2 ஆயிரத்து 720 பள்ளிக்கூடங்கள் உள்ளன. இந்த பள்ளிக்கூடங்களில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் செயல்படவில்லை.

Next Story