பூதப்பாண்டி அருகே துணிகரம் ராணுவ வீரர் தாயாரிடம் 4½ பவுன் நகை பறிப்பு முகவரி கேட்பது போல் மர்மநபர் கைவரிசை


பூதப்பாண்டி அருகே துணிகரம் ராணுவ வீரர் தாயாரிடம் 4½ பவுன் நகை பறிப்பு முகவரி கேட்பது போல் மர்மநபர் கைவரிசை
x
தினத்தந்தி 26 Jan 2019 4:00 AM IST (Updated: 25 Jan 2019 10:03 PM IST)
t-max-icont-min-icon

பூதப்பாண்டி அருகே ராணுவ வீரர் தாயாரிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகிறார்கள்.

பூதப்பாண்டி, 

இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பூதப்பாண்டி அருகே கடுக்கரை, கீரன்குளத்தை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 48). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது வீட்டில் தாயார் நல்லம்மாள் (74) தங்கியுள்ளார். சம்பவத்தன்று நல்லம்மாள் பக்கத்து வீட்டாருடன் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வந்தார். அவர் மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்திவிட்டு நல்லம்மாளின் அருகில் சென்று முகவரி கேட்பது போல் பேச்சை கொடுத்தார்.

நல்லம்மாள் அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென அவரது கழுத்தில் கிடந்த 4½ பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த நல்லம்மாளும், அவருடன் இருந்தவர்களும் சத்தம் போட்டனர். உடனே, அந்த நபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றார்.

இதுகுறித்து நல்லம்மாள் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம நபரை தேடி வருகிறார்கள். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில்

கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளதா என போலீசார் ஆய்வு செய்கிறார்கள். முகவரி கேட்பது போல் நடித்து முன்னாள் ராணுவ வீரர் தாயாரிடம் நகை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பகுதியில் நகை பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. எனவே, இதை தடுக்க போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story