பெரம்பலூர் மாவட்டத்தில் 4-வது நாளாக அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் சாலை மறியலில் ஈடுபட்ட 1,410 பேர் கைது
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் சாலை மறியலில் ஈடுபட்ட 1,410 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்,
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் அரசு பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். 21 மாத நிலுவை தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பினை பறிக்கிற வகையில் அமைக்கப்பட்டுள்ள பணியாளர்கள் பகுப்பாய்வு குழுவினை தமிழக அரசு ரத்து செய்திட வேண்டும்.
3 ஆயிரத்து 500 தொடக்க பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும், 3 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடும் முடிவினையும் ரத்து செய்ய வேண்டும். அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தப்படுவதை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சங்கங்களின் கூட்டமைப்பான பெரம்பலூர் மாவட்ட ஜாக்டோ- ஜியோவினர் கடந்த 22-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
போராட்டத்தின் முதல் நாளில் ஆர்ப்பாட்டமும், அடுத்தடுத்த நாட்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4-வது நாளான நேற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏராளமானோர் தங்களது பணிக்கு செல்லாமல் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே காலையிலேயே ஒன்று திரண்டனர். இதில் ஏராளமானோர் கருப்பு சட்டையும், பெண் அரசு ஊழியர்கள்- ஆசிரியைகள் கருப்பு சேலையும் அணிந்து வந்திருந்தனர். பின்னர் அவர்கள் ஜாக்டோ- ஜியோவின் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான ராஜேந்திரன், ராஜ்குமார், தயாளன், ராமர், கவியரசன், அருள்ஜோதி ஆகியோர் தலைமையில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் செல்வராஜ், மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில், மறியல் போராட்டம் நடத்துவதற்காக பாலக்கரை ரவுண்டானா அருகே உள்ள சாலைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மறியலில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்க தொடங்கின. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலை கைவிடவில்லையென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்தனர். ஆனாலும் அவர்கள் மறியலை கைவிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 725 பெண்கள் உள்பட 1,410 அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றி அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பில் உள்ள சங்கங்களான தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, அரசு ஊழியர்கள் சங்கம், பட்டதாரி ஆசிரியர் கழகம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, அரசு பணியாளர்கள் சங்கம், உயர்நிலை- மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட 36 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story