ஐகோர்ட்டு உத்தரவை மீறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் 2 ஆயிரம் பேர் கைது
சென்னை ஐகோர்ட்டு உத்தரவை மீறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து 1,000 பெண்கள் உள்பட 2 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ கடந்த 22-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து நேற்று 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதனால் தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் பணியாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. 4 நாட்களாக அரசு அலுவலர்கள் வேலைக்கு வராததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு விரைவில் தொடங்க உள்ளதால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் 25-ந் தேதிக்குள் (நேற்று) பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இருப்பினும் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நாங்கள் பணிக்கு திரும்ப மாட்டோம் என்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஐகோர்ட்டு உத்தரவையும் மீறி நேற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது. சாலை மறியல் போராட்டத்திற்காக கலெக்டர் அலுவலகம் முன்பு காலை முதலே அரசு ஊழியர்களும், ஆசிரியர்களுக்கும் திரண்டனர். காலை 11.30 மணி அளவில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க திருவண்ணாமலை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாதுரை, செல்வி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் இந்த போராட்டத்தின் பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சிலர் ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 1,000 பெண்கள் உள்பட 2 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் அடைத்தனர்.
Related Tags :
Next Story