40 அடி பள்ளத்தில் விழுந்து 3 பேர் பலி: மேம்பால தடுப்புச்சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்
குடியாத்தம் ரெயில்வே மேம்பால தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி, 40 அடி பள்ளத்தில் விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். இதனால் மேம்பால தடுப்புச்சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வரியுறுத்தி உள்ளனர்.
குடியாத்தம்,
பள்ளிகொண்டா செல்லியம்மன் நகரை சேர்ந்தவர் ஜெயசீலன், ஆட்டோ டிரைவர். இவரது மகன் பிரதீப் (வயது 20). பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பள்ளிகொண்டா பள்ளிக்கூட தெருவை சேர்ந்த லாரி டிரைவர் சரவணன் மகன் நவீன் (20). பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். பள்ளிகொண்டா அய்யாவு நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சேட்டு மகன் அபினாஷ் (20). கேட்டரிங் வேலை செய்து வந்தார். பிரதீப், நவீன், அவினாஷ் ஆகியோர் நண்பர்கள்.
நேற்று முன்தினம் இரவு இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் குடியாத்தத்திற்கு வேலை சம்பந்தமாக வந்துள்ளனர். அப்போது குடியாத்தம் ரெயில்வே மேம்பாலத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சுமார் 40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே மோட்டார் சைக்கிள் விழுந்தது. இதில் அவர்கள் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. பள்ளிகொண்டாவில் ஒரே பகுதியை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குடியாத்தம் ரெயில்வே மேம்பால தடுப்புச்சுவரின் உயரம் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் மேம்பாலம் பகுதியில் மின்விளக்கு இல்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் இந்த மேம்பாலத்தை அச்சத்துடன் கடக்க வேண்டிய நிலை உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்புச்சுவரின் உயரத்தை அதிகரிக்கவும், மேம்பாலம் பகுதியில் மின்விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story