விருகம்பாக்கத்தில் தேசிய அளவிலான நாணய கண்காட்சி


விருகம்பாக்கத்தில் தேசிய அளவிலான நாணய கண்காட்சி
x
தினத்தந்தி 26 Jan 2019 4:00 AM IST (Updated: 26 Jan 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

விருகம்பாக்கத்தில் 3 நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான நாணய கண்காட்சி நேற்று தொடங்கியது.

பூந்தமல்லி,

சென்னை நாணயவியல் கழகம் சார்பில், 3-ம் ஆண்டு தேசிய அளவிலான நாணய கண்காட்சி விருகம்பாக்கம் சாலிகிராமம், அருணாச்சலம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று தொடங்கியது.

தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு நாணயவியல் கழகத்தின் தலைவர் மணிகண்டன், செயலாளர் கார்த்திக் ஆகியோர் ஏற்பாடு செய்து உள்ளனர். இது குறித்து அவர்கள் இருவரும் கூறியதாவது:-

ஆண்டுதோறும் 3 நாட்கள் நடக்கும் இந்த நாணய கண்காட்சியின் 3-ம் ஆண்டு கண்காட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தியாவின் வரலாறு, நாகரிகம், பண்பாடு, கலை, இலக்கியம், கலாசாரம் உள்ளிட்டவைகளை இன்றைய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த கண்காட்சி அமைந்துள்ளது.

சங்க கால நாணயங்கள், சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்டபோது பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், மதுரை, தஞ்சாவூர் நாயக்கர்கள், பிரெஞ்சுக்காரர்கள் உபயோகப்படுத்திய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் உள்பட சங்க காலத்து கலை மற்றும் அரசர்கள் உபயோகப்படுத்திய பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்று உள்ளன.

இந்தியாவில் உள்ள அனைத்து டீலர்களும் இதில் கலந்துகொண்டனர். பல ஆண்டுகளுக்கு முந்தைய கலைப்பொருட்கள், பிரிட்டீஷ் கண்காட்சியகத்தில்கூட பார்க்க முடியாத நாணயங்களை இங்கு பார்க்கலாம், தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று பழைய நாணயம் சேகரிப்பில் ஆர்வம் உள்ளவர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் தங்களது குடும்பத்துடன் வந்து நாணய கண்காட்சியை பார்வையிட்டு தங்களுக்கு வேண்டிய சங்க காலத்து நாணயங்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

கண்காட்சியில் தபால் தலைகளும் இடம்பெற்று உள்ளன. இளம் தலைமுறையினருக்கு தமிழ் கலாசாரம், இலக்கியம், பண்பாடு பற்றி தெரிந்து கொள்ள இந்த கண்காட்சி உதவியாக இருக்கும். கோவில் கோபுரம், கல்வெட்டு, ஓலைச்சுவடி வைத்துதான் வரலாற்றை அறிந்துகொள்ள முடியும் என்றல்ல. இதுபோன்ற சங்க காலத்து நாணயங்களை வைத்தும் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நாணயம், வாணிபம் செய்ய வந்த டச்சுக்காரர்கள் பயன்படுத்திய நாணயங்களும் இடம்பெற்று உள்ளன. இதில் வெளிநாட்டினரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு சங்க கால நாணயங்களை வாங்கி சென்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story