அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் 3-வது நாளாக சாலை மறியல்


அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் 3-வது நாளாக சாலை மறியல்
x
தினத்தந்தி 26 Jan 2019 4:30 AM IST (Updated: 26 Jan 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 3-வது நாளாக நேற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் செய்த 1,679 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி,


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 22-ந்தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தேனியில் முதல் நாள் போராட்டத்தின் போது கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதன்பிறகு 2-வது மற்றும் 3-வது நாளில் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகினர். நேற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்து 81 பேர் நேற்று வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். இது மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் சுமார் 34 சதவீதம் ஆகும். அதிகபட்சமாக கல்வித்துறையில் 3 ஆயிரத்து 644 பேர் வேலைநிறுத்தம் செய்தனர்.

சாலை மறியல்

கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் 3-வது நாளாக நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழனிசெட்டிபட்டியில் இருந்து தேனி நேரு சிலை சிக்னல் நோக்கி ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்துக்கு ஜாக்டோ-ஜியோ மாநில நிதி காப்பாளர் மோசஸ் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது அலி ஜின்னா மற்றும் ஜாக்டோ- ஜியோவில் அங்கம் வகிக்கும் சங்கங்களின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களும், நேரு சிலை சிக்னல் பகுதிக்கு வந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 1,185 பெண்கள் உள்பட மொத்தம் 1,679 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனியில் உள்ள திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தொடர் வேலைநிறுத்தம் எதிரொலியாக அரசு அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தால் மூடப்பட்டன. திறந்து இருந்த பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு முழுமையாக வகுப்புகள் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. 

Next Story