எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கும் அரசாணை தற்காலிகமாக நிறுத்தம்


எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கும் அரசாணை தற்காலிகமாக நிறுத்தம்
x
தினத்தந்தி 26 Jan 2019 4:30 AM IST (Updated: 26 Jan 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கும் அரசாணை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் வின்சென்ட் பால்ராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

மதுரை,


தொடக்கக்கல்வி துறை சார்பில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றனர். அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை புதிதாக தொடங்கப்பட்டுள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் பணி அமர்த்த கடந்த டிசம்பர் மாதம் சமூகநலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது. எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான ஆசிரியர்கள், கிண்டர் கார்டன் பயிற்சி அல்லது மாண்டிசோரி கல்வி முடித்திருக்க வேண்டும். இந்த பயிற்சி முடிக்காத இடைநிலை ஆசிரியர்கள் எப்படி மேற்கண்ட வகுப்புகளை எடுக்க முடியும்.

இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக இருந்தால், அதே துறையில் தான் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் விதிகளுக்கு மாறாக தொடக்கக் கல்வியில் இருந்து, சமூக நலத்துறைக்கு மாற்றி அரசாணை பிறப்பித்து இருப்பது ஏற்கத்தக்கதல்ல. இந்த அரசாணையை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு மாண்டிசோரி அல்லது கிண்டர் கார்டன் பயிற்சி பெற்றவர்களையே நியமிக்க வேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் இடைநிலை ஆசிரியர்களை எந்த அடிப்படையில் பணியமர்த்துகிறீர்கள்? என அரசு வக்கீலிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “இந்த விவகாரத்தில் விதிகளை தளர்த்தக்கோரி தேசிய ஆசிரியர் கல்வி கழகத்தில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. அது நிலுவையில் உள்ளது. எல்.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பான அரசாணை வருகிற 30-ந்தேதி வரை நடைமுறைப்படுத்தப்படாது“ என தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கை வருகிற 30-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Next Story