நெல்லையில் இரவில் பரபரப்பு அரசு ஊழியர், ஆசிரியர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை


நெல்லையில் இரவில் பரபரப்பு அரசு ஊழியர், ஆசிரியர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Jan 2019 3:45 AM IST (Updated: 26 Jan 2019 8:24 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் இரவில் அரசு ஊழியர், ஆசிரியர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் நேற்று ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 3 இடங்களில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதில் கைது செய்யப்பட்ட 2 ஆயிரத்து 367 பேரை நெல்லை கொக்கிரகுளம், தென்காசி மற்றும் சங்கரன்கோவிலில் உள்ள மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மண்டபத்தில் இருந்து மாலையில் அனைவரும் வழக்கம் போல் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போலீசார் தரப்பில் முக்கிய நிர்வாகிகள் 20 பேரை கைது செய்ய உள்ளோம். எனவே அவர்கள் தவிர மற்றவர்கள் புறப்பட்டு செல்லலாம் என்று கூறப்பட்டது. இதற்கு போராட்டக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மண்டபத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுதலை ஆவார்களா? சிறையில் அடைக்கப்படுவார்களா? என்று நள்ளிரவையும் தாண்டி இழுபறி நிலை நீடித்து பரபரப்பை உருவாக்கிக் கொண்டிருந்தது.

இதற்கிடையே கைதாகி இருந்தவர்களின் குடும்பத்தினர் மண்டபத்துக்கு தேடி வந்தனர். அவர்களை போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதேபோல் கோவில்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 690 பேர் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் இரவு வரை விடுவிக்கப்படவில்லை. இதற்கிடையே மண்டபத்தில் இருந்து 4 ஆசிரியர்களை போலீசார் பிடித்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் வந்து மண்டபத்தில் இருந்தவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கும் இரவில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story