பா.ஜனதாவுடன் சிவசேனா கைகோர்க்காவிட்டால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் பேட்டி
சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன், சிவசேனா கைகோர்க்காவிட்டால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் கூறினார்.
மும்பை,
சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன், சிவசேனா கைகோர்க்காவிட்டால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் கூறினார்.
தேர்தல் கூட்டணி
நாடாளுமன்ற மற்றும் மராட்டிய சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளன. ஆனால் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி அமைக்குமா என்பது தொடர்ந்து கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் மும்பையில் மராட்டிய வருவாய்த்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல், நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும்
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக இருந்தால் நாமும் தேர்தலை தனித்து சந்திப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது. தற்போதைய சூழ்நிலையை சிவசேனா கட்சியும் நன்கு அறியும். பா.ஜனதாவுடன் சிவசேனா கைகோர்க்காவிட்டால் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும்.
பா.ஜனதா தோல்வி குறித்து ஒருபோதும் அஞ்சவில்லை. எங்கள் கட்சி கண்டிப்பாக மத்தியில் ஆட்சி அமைக்கும். ஏற்கனவே 20 மாநிலங்களில் பா.ஜனதா அதிகாரத்தில் உள்ளது.
சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா 100 முதல் 110 இடங்களிலும், சிவசேனா 40 முதல் 50 இடங்களிலும் வெற்றி பெற்றால் மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். இதனால் எந்த அரசியல் கட்சிக்கும் பாதிப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நிலநடுக்கம்
பால்கர் பகுதியில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “ பால்கரில் குறிப்பிட்ட இரண்டு கிராமங்களில் தான் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த கிராம மக்கள் தங்குவதற்கு தற்காலிக ஏற்பாடுகளை செய்துகொடுக்க கலெக்டரை அறிவுறுத்தி உள்ளோம். அவர்களை வேறு இடத்திற்கு மாற்றலாமா அல்லது அவர்களுக்கு புதிய வீடுகள் வழங்கலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்றார்.
Related Tags :
Next Story