ஆட்சிக்கு வந்ததும் கோபிநாத் முண்டே மரணம் குறித்து நீதி விசாரணை தேசியவாத காங்கிரஸ் சொல்கிறது


ஆட்சிக்கு வந்ததும் கோபிநாத் முண்டே மரணம் குறித்து நீதி விசாரணை தேசியவாத காங்கிரஸ் சொல்கிறது
x
தினத்தந்தி 26 Jan 2019 4:30 AM IST (Updated: 26 Jan 2019 4:10 AM IST)
t-max-icont-min-icon

தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கோபிநாத் முண்டே மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறியுள்ளார்.

மும்பை, 

தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கோபிநாத் முண்டே மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறியுள்ளார்.

கோபிநாத் முண்டே மரணம்

பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி கோபிநாத் முண்டே கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 3-ந்தேதி டெல்லியில் நடந்த கார் விபத்தில் பலியானார். மத்திய மந்திரியாக பதவியேற்ற சில நாட்களில் அவர் விபத்தில் பலியானது அதிா்ச்சியை ஏற்படுத்தியது. அவரது சாவில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனினும் சி.பி.ஐ. விசாரணையில் கோபிநாத் முண்டே விபத்தில் பலியானது உறுதி செய்யப்பட்டது.

இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு, கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை வடிவமைத்தவர்களில் ஒருவரான சையது சுஜா என்ற இணைய நிபுணர் லண்டனில் இருந்து ‘ஸ்கைப்’ மூலமாக இந்திய பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில், “2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு நடந்ததாகவும், இந்த வி‌ஷயத்தை தெரிந்துகொண்ட பா.ஜனதா மூத்த தலைவர் கோபிநாத் முண்டே, சாலை விபத்து என்ற பெயரில் கொல்லப்பட்டார்” எனவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணை நடத்தப்படும்

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஹிங்கோலியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறியதாவது:-

கோபிநாத் முண்டேயை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கோபிநாத் முண்டே மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். சி.பி.ஐ. மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வேலை செய்து வருகின்றனர்.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியை வைத்து கோபிநாத் முண்டே மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story