திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 26 Jan 2019 5:04 AM IST (Updated: 26 Jan 2019 5:04 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி,

கேரள மாநிலம் சுல்தான்பத்தேரி என்ற இடத்தில் இருந்து மரம் பாரம் ஏற்றிய லாரி ஒன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நோக்கி புறப்பட்டது. லாரியை நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த விஜயகுமார் (வயது 38) என்பவர் ஓட்டினார்.

தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையின் 26-வது கொண்டை ஊசி வளைவு அருகே நேற்று காலை 7 மணி அளவில் வந்தபோது லாரியின் பின்புறம் அப்படியே துண்டாகி ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மரங்கள் அனைத்தும் தார்ப்பாய் போட்டு கட்டப்பட்டிருந்ததால் அது ரோட்டில் சிதறவில்லை. இதில் டிரைவர் விஜயகுமார் காயமின்றி உயிர் தப்பினார். எனினும் இந்த விபத்தால் ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுபற்றி அறிந்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லாரியை மீட்டு அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்காக பண்ணாரியில் இருந்து 2 கிரேன்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி நடைபெற்றது. மதியம் 12 மணி அளவில் லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து வாகன போக்குவரத்து தொடங்கியது. 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.

Next Story