விபத்தில் பலியான வாலிபரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்


விபத்தில் பலியான வாலிபரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 26 Jan 2019 5:55 AM IST (Updated: 26 Jan 2019 5:55 AM IST)
t-max-icont-min-icon

மேலூரில் விபத்தில் பலியான வாலிபரின் சாவில் சந்தேகம் இருப்பதாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மேலூர்,

மேலூர் அருகே உள்ள தும்பைபட்டியை சேர்ந்த ராஜ்குமாரின் மகன் அஜித்குமார் (வயது23). இவர் மேலூரில் பழக்கடையில் வேலைபார்த்து வந்தார். வேலை முடிந்து இரவில் மோட்டார் சைக்கிளில் தனியாக வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது மேலூரில் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு சாலையில் புதிய பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அஜித் குமார் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து இறந்துகிடந்தார். தகவல் அறிந்து உடலை கைப்பற்றிய மேலூர் போலீசார் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் பலியானதாக வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் அஜித்குமாரின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என வாலிபரின் உறவினர்கள் மேலூர் பஸ் நிலையம் அருகே 2 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து தாசில்தார் சரவணன் மற்றும் போலீஸ் துணைசூப்பிரண்டு சுபாஷ் ஆகியோர் சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. அதன் பின்னர் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அஜித்குமாரின் உடலை அவரது குடும்பத்தினர் பெற்றனர். இந்த சம்பவத்தை அடுத்து தும்பைப்பட்டியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story