ஊட்டியில் குடியரசு தின விழா கோலாகலம் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
ஊட்டியில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசிய கொடியை ஏற்றினார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து கலெக்டர் போலீஸ் வாகனத்தில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். அப்போது அவருடன் போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா உடனிருந்தார்.
அதனை தொடர்ந்து ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படை, தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள், இந்திய செஞ்சிலுவை சங்க மாணவர்கள், சாரணர் படை மாணவர்கள் ஆகியோர் பேண்டு வாத்தியம் முழங்க வரிசையாக வந்து அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். இதனை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஏற்றுக்கொண்டார்.
நீலகிரி மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் 18 பேருக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டது. முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தின் மூலம் போரில் வீர மரணம் அடைந்த 5 வீரர்களின் குடும்பத்தினருக்கு வருடாந்திர பராமரிப்பு மானியமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம், தாட்கோ மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 46 ஆயிரத்து 323 மதிப்பில் வாகன கடனுதவி, தோட்டக்கலைத்துறை மூலம் 5 பேருக்கு ரூ.92 ஆயிரத்து 653 மானியம் வழங்கப்பட்டது.
வேளாண்மை பொறியியல் துறை மூலம் வேளாண் எந்திரயமயமாக்கல் திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு ரூ.10 லட்சத்து ஆயிரத்து 687 மானியம் உள்பட மொத்தம் 23 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 50 ஆயிரத்து 663 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மருத்துவம் மற்றும் கிராம சுகாதார துறையில் சிறப்பாக பணிபுரிந்த அரசு டாக்டர்கள் விஸ்வநாதன், திவ்யா, அசோக், விஜி, ரவிசங்கர், ஜெசிந்தா ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப் பட்டன.
மேலும் முதுமலை புலிகள் காப்பகம், கால்நடைத்துறை, தொழிலாளர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன், டாக்டர் மனோகரன் உள்பட 20 பேருக்கு மாவட்ட ஆட்சியரின் சிறந்த பணிக்கான விருதுகள் வழங்கப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் காமராஜர் விருது பெற்ற ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, எல்லநள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி, சக்கத்தா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இடுஹட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பரிசுத்தொகையை கலெக்டர் வழங்கினார்.
அதனை தொடர்ந்து விழாவில் நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் பழங்குடியினர்களான தோடர், கோத்தர், குரும்பர் இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் அவர்கள் தங்களது இசையை வாசித்தபடி, பாரம்பரிய உடையணிந்து நடனம் ஆடினர். இதனை அங்கு திரண்டு இருந்த பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். இதையடுத்து ராணுவ வீரர்களின் தியாகம், தேசபற்று, தமிழர்களின் வீரம், படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் ஆகியவற்றில் பள்ளி மாணவ-மாணவிகள் உற்சாகமாக ஆடினார்கள்.
பிளாஸ்டிக் பொருட்களை வெளியில் கொட்டுவதால் குளம், ஏரி, கடலில் படிவது மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதை விளக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை ஒழிப்போம் என்ற விழிப்புணர்வு நடனம், வாக்களிக்கும் உரிமை, பெண் குழந்தை பாதுகாப்பு போன்றவற்றை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் தத்ரூபமாக நடனத்தை அரங்கேற்றினர். தொடர்ந்து பள்ளி மாணவிகள் தேச ஒற்றுமையை நினைவுகூறும் வகையில் பிரமிடுகள் போன்று நின்றனர்.
இதையடுத்து அவ்வூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் தமிழகத்தில் அழிந்து வரும் நாட்டுப்புற இசைகளை தாங்களே முழங்கியபடியும், ஒரு வளையத்தை உடல் மீது வைத்தும் நடனம் ஆடினர். இவர்களது நடனம் விழாவில் கலந்துகொண்ட அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் வெகுவாக கவர்ந்தது. குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, சமூக வலைத்தளத்தால் ஏற்படும் தீமைகள், மத நல்லிணக்கம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடனம் ஆடினார்கள். கலைநிகழ்ச்சியில் நடனம் ஆடிய பள்ளி மாணவி ஒருவர் கீழே விழுந்ததில், அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. முடிவில் காவல்துறை பணியாளர்கள் 2 பேர் கரகாட்டம் ஆடினர். பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
விழாவில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் அமர் குஷ்வாஹா, மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ், சப்-கலெக்டர் ரஞ்சித்சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, மாவட்ட வன அதிகாரி சுமேஷ் சோமன், முதன்மை கல்வி அதிகாரி நாசரூதின், தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் தினேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். குடியரசு தின விழாவையொட்டி, போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story