தெப்பக்காடு முகாமில் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய வளர்ப்பு யானைகள்
தெப்பக்காடு முகாமில் நடந்த குடியரசு தின விழாவில் தேசியக்கொடிக்கு வளர்ப்பு யானைகள் மரியாதை செலுத்தின.
முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு 23 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் கும்கி யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டுயானைகளை விரட்ட பயன்படுத்தப்படுகின்றன. வனத்துறை ஊழியர்கள் போலவே தெப்பக்காடு முகாமில் இருந்து வரும் இந்த யானைகள், ஆண்டுதோறும் சுதந்திர மற்றும் குடியரசு தின விழாக்களில் கலந்துகொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்துகின்றன. இந்த நிலையில் நேற்று தெப்பக்காடு முகாமில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் வனத்துறை ஊழியர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் பாகன்களுடன் வளர்ப்பு யானைகள் கலந்து கொண்டன.
விழாவில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் செண்பக பிரியா தேசிய கொடியை ஏற்றி வைத்ார். பின்னர் அனைவரும் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். அப்போது வளர்ப்பு யானைகளும் துதிக்கையை தூக்கி பிளிறியவாறு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின. இதையடுத்து வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்களுக்கு கைப்பந்து, உரியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. விழாவில் வனச்சரகர்கள் ராஜேந்திரன், சிவக்குமார், தயாநந்தன், விஜய் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story