முதுமலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்: வன உரிமை சட்டத்தை அமல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
வன உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று முதுமலை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கூடலூர்,
குடியரசு தினத்தையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூடலூர் தாலுகா முதுமலை ஊராட்சி முதுகுளியில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றிய உதவி திட்ட அலுவலர் கிரிஹரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஊராட்சியை சேர்ந்த மக்கள் 50 பேர் கலந்துகொண்டனர்.
அப்போது ஒவ்வொரு கிராம சபை கூட்டங்களிலும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். பின்னர் ஊராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் வரவு-செலவு கணக்கு விவரத்தை தர வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர். ஆனால் வரவு-செலவு கணக்கு இனி வரும் நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு தரப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். தொடர்ந்து 2006-ம் ஆண்டின் வன உரிமை சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், மேலும் ஊராட்சி பகுதியில் அடிப்படை வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதேபோல் ஸ்ரீமதுரை ஊராட்சியிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
பந்தலூர் தாலுகா சேரங்கோடு ஊராட்சியின் கிராம சபை கூட்டம் சேரம்பாடி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கூடலூர் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் கிருஷ்ண பிரசாத் தலைமை தாங்கினார். தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் வினோத், பந்தலூர் காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் ஜீவா, கையுன்னி கிராம நிர்வாக உதவியாளர் தங்கப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அய்யன்கொல்லி, மானூர் உள்பட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சாலை, நடைபாதை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மனுக்கள் அளித்தனர். இதேபோல் கூடலூரில் இருந்து வைத்திரி, கோழிக்கோடு, சுல்தான்பத்தேரி ஆகிய பகுதிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் காட்டுயானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும், போதிய தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேபோல் நெலாக்கோட்டை ஊராட்சியில் பொறியாளர் ஜோதி லிங்கம் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story