விழுப்புரத்தில் குடியரசு தின விழா கோலாகலம் கலெக்டர் சுப்பிரமணியன் தேசிய கொடி ஏற்றினார்


விழுப்புரத்தில் குடியரசு தின விழா கோலாகலம் கலெக்டர் சுப்பிரமணியன் தேசிய கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 27 Jan 2019 5:00 AM IST (Updated: 26 Jan 2019 10:33 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தேசிய கொடியை ஏற்றினார்.

விழுப்புரம், 

இந்தியா முழுவதும் நேற்று 70-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி விழா மைதானத்திற்கு காலை 8 மணிக்கு வந்த மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனை, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் போலீசார் வரவேற்றனர். 8.05 மணிக்கு கலெக்டர் சுப்பிரமணியன், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து கலெக்டர் சுப்பிரமணியன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். இந்த அணிவகுப்பில் ஊர்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், இளம் செஞ்சிலுவை சங்கத்தினர் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறாக்களையும், வண்ண, வண்ண பலூன்களையும் கலெக்டர் சுப்பிரமணியன் வானில் பறக்க விட்டார். தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய

போலீசார் 81 பேருக்கு முதல்-அமைச்சர் பதக்கத்தையும், அனைத்துத்துறையை சேர்ந்த 185 அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார்.

அதன் பிறகு சுதந்திர போராட்ட தியாகிகள் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று அவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.

அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 15 பேருக்கு உதவி உபகரணங்களையும், வருவாய்த்துறை சார்பில் 22 பேருக்கு கல்வி உதவித்தொகை, 3 பேருக்கு தற்காலிக இயலாமை உதவித்தொகை, 5 பேருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகையையும், வேளாண்மை துறை சார்பில் 20 பேருக்கு சொட்டுநீர் பாசன கருவிகள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2 பேருக்கு திருமண உதவித்தொகை, 3 பேருக்கு வருடாந்திர பராமரிப்பு தொகை, 2 பேருக்கு கல்வி உதவித்தொகை, 2 பேருக்கு ஈமச்சடங்கு உதவித்தொகையையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 13 பேருக்கு சிப்பம் கட்டும் அறைக்கான உத்தரவு மற்றும் மினி டிராக்டர்களும், தாட்கோ மூலம் 9 பேருக்கு வாகனங்களும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 14 பேருக்கு சலவைப்பெட்டிகளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பேருக்கு தையல் எந்திரங்களும், 5 பேருக்கு சலவை எந்திரங்களும், சமூகநலத்துறை சார்பில் 2 பேருக்கு கலப்பு திருமண நிதி உதவியும், வேளாண்மை மற்றும் பொறியியல் துறை சார்பில் 23 பேருக்கு வேளாண் கருவிகளையும் ஆக மொத்தம் 145 பேருக்கு ரூ.2 கோடியே 34 லட்சத்து 63 ஆயிரத்து 760 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார்.

அதன் பின்னர் எலவனாசூர்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவெண்ணெய்நல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் ஜான்டூயி மெட்ரிக் பள்ளி, செஞ்சி சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் தூய இருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் இமேஜ் நடனப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த கலை நிகழ்ச்சிகளில் மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பார்வையாளர்களை அசத்தினார்கள். கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ் குமார், மாவட்ட வருவாய் அதிகாரி பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் முகிலன், புகழேந்தி, உதவி கலெக்டர் (பயிற்சி) சரவணன், முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கார்த்திகேயன், மஞ்சுளா, கோட்டாட்சியர் குமாரவேல், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சாந்தி, தாசில்தார் சையத்மெகமூத், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகரன், உடற்கல்வி ஆய்வாளர் பத்மநாபன், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், ஊர்காவல் படை மண்டல தளபதி ஸ்ரீதரன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழா நிகழ்ச்சிகளை விழுப்புரம் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலு, ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் மோகனசுந்தரம் ஆகியோர் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்கள். விழாவையொட்டி கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story