சென்னையில் அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா


சென்னையில் அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா
x
தினத்தந்தி 25 Jan 2019 10:30 PM GMT (Updated: 26 Jan 2019 5:25 PM GMT)

சென்னையில் உள்ள மத்திய-மாநில அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் முதன்மை தலைமை கமிஷனர் பி.முரளிகுமார் தேசியகொடி ஏற்றினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் நிர்வாக இயக்குனர் பத்மஜா சுந்துரு தேசியகொடி ஏற்றினார். சென்னையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை அலுவலக வளாகத்தில் நிர்வாக இயக்குனர் ஆர்.சுப்பிரமணியகுமார் தேசியகொடி ஏற்றினார்.

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் தலைமை மேலாளர் சஞ்சய்குமாரும், சென்னை துறைமுக வளாகத்தில் துறைமுக கழக தலைவர் பி.ரவீந்திரனும் தேசியகொடி ஏற்றி வைத்தனர்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் தென்மண்டல மேலாளர் ஆர்.தாமோதரன் தேசியகொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், கலெக்டர் அ.சண்முகசுந்தரம் தேசியகொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட வருவாய் அதிகாரி சு.கருணாகரன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின்போது சுதந்திர போராட்ட தியாகிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் கவுரவித்தார். பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகையில் கமிஷனர் டி.கார்த்திகேயன் தேசியகொடி ஏற்றினார். தேசிய மாணவர் படை, சாரணர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுவினருக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் துணை கமிஷனர் ஆர்.லலிதா உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் தலைமையகமான பல்லவன் இல்லத்தில் நடந்த குடியரசு தின விழாவில், போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அ.அன்பு ஆபிரகாம் தேசியகொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கடந்த 17-ந்தேதி காணும் பொங்கல் அன்று சிறப்பாக பணியாற்று நிர்ணயித்த வருவாயை விட அதிகமாக வசூல் செய்த 6 கிளை மேலாளர்கள், 9 பரிசோதகர்கள், சிறப்பு பரிசோதனைக்காக 3 கிளை மேலாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல கடந்த ஆண்டு சிறப்பாக பணிபுரிந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களும் கவுரவிக்கப்பட்டனர்.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தலைமை அலுவலகத்தில், மேலாண்மை இயக்குனர் அஷோக் டோங்ரே தேசியகொடி ஏற்றினார். கடந்த ஆண்டில் பல்வேறு பணிகளில் சிறப்பாக பணிபுரிந்த வாரிய அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிதி இயக்குனர் கே.முத்துக்குமாரசாமி, பொறியியல் இயக்குனர் ஆர்.சிவசண்முகம், பொதுமேலாளர் த.ராமதுரைமுருகன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் இணை கமிஷனர் ஆர்.சுதர்சன் தேசியகொடியை ஏற்றினார். இணை கமிஷனர்கள் ந.தனபால், சி.லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் கே.சத்யகோபால் தேசியகொடி ஏற்றினார்.

தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக மேலாண்மை இயக்குனர் எஸ்.சண்முகம் தேசியகொடி ஏற்றினார். மின்வாரிய செயலாளர் சின்னப்பையன், முதன்மை பொறியாளர் ரமேஷ் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

சென்னை தேனாம்பேட்டை கணக்கு தணிக்கைத்துறை அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் முதன்மை கணக்கு தணிக்கையாளர் தேவிகா நாயர், வணிக தணிக்கைத்துறை இயக்குனர் ஆர்.அம்பலவாணன் ஆகியோர் இணைந்து தேசியகொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு வக்பு வாரிய தலைமை அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி என்.எஸ்.முகமது அஸ்லம் தேசியகொடி ஏற்றினார். வக்பு வாரிய உதவி செயலாளர்கள் எஸ்.வசீர் அகமது லெப்பை, ஏ.கே.முகமது சர்தார், எஸ்.ராஜகோபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவை உள்பட மத்திய-மாநில அரசு அலுவலகங்களில் குடியரசு தினத்தையொட்டி நேற்று தேசியகொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தேசிய கொடியை விமான நிலைய ஆணைய இயக்குனர் சந்திரமவுலி ஏற்றினார்.

பின்னர் அவர் பேசும்போது, “சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயன்படுத்தாமல் உள்ள பன்னாட்டு 4-வது வருகை முனையத்தை பன்னாட்டு புறப்பாடு முனையமாக மாற்றப்பட்டு உள்ளது. விரைவில் இந்த முனையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. சென்னையில் இருந்து ஜப்பான், இந்தோனேசியா நாடுகளுக்கு நேரிடையாக விமான சேவை தொடங்குவது பற்றி அந்நாட்டு விமான நிறுவனங்கள் பேசி வருகின்றன. கோடைகாலத்துக்கு பிறகு இந்த விமான சேவைகளை தொடங்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

மீனம்பாக்கம் விமான நிலைய வளாகத்தில் உள்ள தென் மண்டல விமான நிலைய ஆணையக அலுவலகத்தில் தென் மண்டல இயக்குனர் ஸ்ரீகுமார் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

Next Story