தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்க வந்தவர்கள் அலைக்கழிப்பு: விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை பட்டதாரி ஆசிரியர்கள் முற்றுகை
தற்காலிக ஆசிரியர் பணி கேட்டு விண்ணப்பிக்க வந்தவர்கள் அலைக்கழிக்கப்பட்டதால் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை பட்டதாரி ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.
விருத்தாசலம்,
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக அரசு பள்ளியில் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் மாணவர்கள் கல்வி நிலையை கருத்தில் கொண்டு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பள்ளிகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலகத்திற்கு நேற்று தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க பட்டதாரி ஆசிரியர்கள் வந்தனர். ஆனால் அங்குள்ளவர்கள் விண்ணப்பங்களை வாங்காமல், விண்ணப்பங்களை வட்டார வள மையத்திலோ அல்லது அந்தந்த பள்ளிக்கூடத்திலோ வழங்குமாறு கூறினர். இதையடுத்து தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க வட்டார வள மையம் மற்றும் அந்தந்த பள்ளிக்கூடத்திற்கு சென்றனர். ஆனால் அங்கும் விண்ணப்பங்களை வாங்கவில்லை.
இதனால் விண்ணப்பங்களை எங்கே கொடுப்பது என்று தெரியாமல் பட்டதாரிகள் தவித்தனர். பின்னர் அனைவரும் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்களை வாங்காமல் அலைக்கழிப்பதை கண்டித்து விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் சப்-கலெக்டர் பிரசாந்த் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்களை வழங்க அவர் நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்கள், போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு சென்று தாங்கள் பூர்த்தி செய்து வைத்திருந்த விண்ணப்பங்களை கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story