ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம் எதிரொலி: தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க குவிந்த பட்டதாரிகள்


ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம் எதிரொலி: தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க குவிந்த பட்டதாரிகள்
x
தினத்தந்தி 26 Jan 2019 10:30 PM GMT (Updated: 26 Jan 2019 5:36 PM GMT)

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம் காரணமாக தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், பள்ளிகளில் பட்டதாரிகள் குவிந்தனர்.

சென்னை,

ஜாக்டோ-ஜியோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சில இடங்களில் ஆசிரியர்கள் வராததால், பள்ளிகளை மூடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அரசு சார்பில் தொடர்ந்து ஆசிரியர்களை பணிக்கு வருமாறு வேண்டுகோளும், எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வந்தது. எனினும் ஆசிரியர்கள், அரசின் வேண்டுகோளை ஏற்காமல், தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், மாணவர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கடந்த 25-ந் தேதிக்குள் பணிக்கு திரும்பவேண்டும் என்று உத்தரவிட்டது. எனினும் ஆசிரியர்கள் தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். பணிக்கு வராத சுமார் 2 லட்சம் ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு, கல்வித்துறை சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் ரூ.10 ஆயிரம் மாதச் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் இரண்டாம் நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள், பி.எட். முடித்த பட்டதாரிகள், முதுகலை தகுதி பெற்றவர்கள் உள்பட தகுதி பெற்ற ஆசிரியர்கள் அருகாமையில் உள்ள முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், பள்ளிகளில் குவிந்தனர்.

சென்னை எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்துக்கும் ஏராளமான பட்டதாரிகள் விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்க வந்திருந்தனர். தகுதியின் அடிப்படையில் 28-ந் தேதி (நாளை) முதல் அவர்களுக்கு பள்ளிகளில் ஆசிரியர் பணி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே நேற்று வரை பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் பெயர் பட்டியலை தயார் செய்து, அந்த பணியிடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு, தகுதியான தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதேபோல பள்ளிகள் முறையாக நடைபெறுவதையும், அனைத்து மாணவர்கள் பள்ளிக்கு வருவதையும் உறுதி செய்யவேண்டும் என்று கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான செயல்பாடுகளை ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சில சங்கங்களை சேர்ந்தவர்கள் நாளை முதல் பணிக்கு திரும்ப திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Next Story