சேலம்–சென்னை இடையே 8 வழிச்சாலை அமைப்பதை தடுக்க தொடர்ந்து போராட வேண்டும் கருத்தரங்கில் நல்லக்கண்ணு வலியுறுத்தல்
சேலம்–சென்னை இடையே 8 வழிச்சாலை அமைப்பதை தடுக்க தொடர்ந்து போராட வேண்டும் என கருத்தரங்கில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வலியுறுத்தினார்.
நாமக்கல்,
முற்போக்கு உழவர் கூட்டமைப்பு சார்பில் நேற்று நாமக்கல்லில் உழவர் சமூகத்திற்கு துரோகம் செய்யலாமா? என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தலைவர் முத்துசாமி தொடங்கி வைத்து பேசினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
சேலம்–சென்னை இடையே 8 வழிச்சாலை தேவையில்லை என்பதை எல்லாரும் ஒத்துக்கொள்கிறார்கள். இதனால் விவசாயம் அழிக்கப்படும். சிறுதொழில்கள் செய்ய முடியாத நிலை ஏற்படும். விவசாயம் அழிந்த பிறகு நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை எனில் தமிழகம் முழுவதும் இது விரிவுப்படுத்தப்படும். எனவே இதை மக்கள் பிரச்சினையாக எடுத்து தொடர்ந்து போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கலந்து கொண்ட சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி சிவசுப்பிரமணியம் அறிக்கை ஒன்றை சமர்பித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
8 வழிச்சாலை எதிர்ப்பு போராட்டம் என்பது இங்கொன்றும், அங்கொன்றுமாக 50 அல்லது 100 பேர் மறியல் செய்வது, கோஷங்கள் போடுவது, இவற்றில் எந்த பயனும் இல்லை. இந்த போராட்டத்தை பெரிய அளவில் எடுத்து சென்றால்தான், நமக்கு பயன் தரும். உங்களிலேயே ஒருசிலர் நல்ல நஷ்டஈடு கொடுத்தால் வாங்கி கொள்ளலாம் என நினைத்தால், இந்த போராட்டத்தில் பயனே இல்லை. தேவையும் இல்லை. ஆகவே இப்போராட்டத்தை எப்படி எடுத்து செல்வது என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
இதை கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ரத்தினம் அனைவருக்கும் படித்து காண்பித்தார். இந்த கருத்தரங்கில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி உள்பட பலர் பேசினர். முடிவில் சமூக ஆர்வலர் காந்தி நன்றி கூறினார்.