சென்னகுப்பம் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்


சென்னகுப்பம் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 27 Jan 2019 3:45 AM IST (Updated: 27 Jan 2019 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஒரகடம் அருகே சென்னகுப்பம் கிராமசபை கூட்டத்தில் அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஒரகடம் சென்னகுப்பம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஊராட்சி செயலர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். இதில் ஒரகடம் சென்னகுப்பம் ஊராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து ஊராட்சி செயலர் அரசு அறிவித்திருந்த திட்டங்கள் குறித்த தீர்மானங்களை கிராமசபை கூட்டத்தில் வாசித்தார். பின்னர் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினைகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பராமரித்தல் மற்றும் கால்வாய்களில் தூர் வாராமல் இருப்பது குறித்து அதிகாரிகளிடம் குறைகளை தெரிவித்தனர். மேலும் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு இருப்பதால் அகற்ற வேண்டி கோரிக்கை வைத்தனர்.

அப்போது அதிகாரிகள், பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். ஆனால் அப்போது ஆவேசமடைந்த பொதுமக்கள் ஒவ்வொரு முறை நடைபெறும் கிராமசபை கூட்டத்திலும் தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டு முழுமையாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், ஊராட்சி செயலர் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கிராம சபை கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story