சிறுமி கொலை: ‘கள்ளக்காதலை கணவரிடம் தெரிவித்ததால் மகளை கொன்றேன்’ கைதான தாய் பரபரப்பு வாக்குமூலம்


சிறுமி கொலை: ‘கள்ளக்காதலை கணவரிடம் தெரிவித்ததால் மகளை கொன்றேன்’ கைதான தாய் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 27 Jan 2019 4:45 AM IST (Updated: 27 Jan 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான அவரது தாய், கள்ளக்காதலை கணவரிடம் தெரிவித்ததால் மகளை கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சேலம்,

கடலூர் மாவட்டம் வேப்பூர் மாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். விவசாயி. இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சிங்கப்பூருக்கு சென்று வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி பிரியங்கா காந்தி (வயது 24). இவர்களுடைய மகள் ஷிவானி (5). ஒரே மகள் என்பதால் பெற்றோர் பாசத்துடன் வளர்த்து வந்தனர்.

சங்கர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருவதால் பிரியங்கா காந்தி, தனது மகளுடன் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இலுப்பநத்தம் கிராமத்தில் தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் பிரியங்கா காந்தி தனது மகளை 60 அடி ஆழ விவசாய கிணற்றில் வீசி கொலை செய்தார். பின்னர் அவரும் கிணற்றில் குதித்து தத்தளித்தார்.

இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து கிணற்றில் இருந்து பிரியங்கா காந்தியையும், ஷிவானியின் உடலையும் மீட்டனர். தொடர்ந்து போலீசார் பிரியங்கா காந்தியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொள்ளையர்கள் பணத்தை பறித்துக்கொண்டு, சிறுமியை கிணற்றில் வீசி கொன்று விட்டு சென்றதாக தெரிவித்தார்.

இதில் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், பிரியங்கா காந்தி உண்மையை ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் வெங்கடேஷ் (25) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த 24-ந்தேதி மகளுடன் வெங்கடேஷ் வீட்டுக்கு சென்றேன். அப்போது வெளிநாட்டில் இருந்து போன் செய்த எனது கணவர் சங்கரிடம், எனது மகள் ஷிவானி எனது கள்ளக்காதல் விவகாரத்தை கூறி விட்டாள். எனவே அவளை கிணற்றில் வீசி கொன்று விட்டு, நானும் கிணற்றில் குதித்து கொள்ளையர்கள் தள்ளி விட்டதாக நாடகமாடியதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். 

Next Story