பிளாஸ்டிக் பைகளை தவிர்த்த கிராம மக்களுக்கு கலெக்டர் பாராட்டு


பிளாஸ்டிக் பைகளை தவிர்த்த கிராம மக்களுக்கு கலெக்டர் பாராட்டு
x
தினத்தந்தி 27 Jan 2019 4:00 AM IST (Updated: 27 Jan 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே பிளாஸ்டிக் பைகளை தவிர்த்த கிராம மக்களுக்கு கலெக்டர் சந்தீப்நந்தூரி பாராட்டு தெரிவித்தார்.

ஆறுமுகநேரி, 

ஆத்தூர் அருகே பிளாஸ்டிக் பைகளை தவிர்த்த கிராம மக்களுக்கு கலெக்டர் சந்தீப்நந்தூரி பாராட்டு தெரிவித்தார்.

கிராமசபை கூட்டம்

குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஆத்தூரை அடுத்த மேல ஆத்தூர் சமுதாய நலக்கூடத்தில் கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். உதவி கலெக்டர்கள் (பயிற்சி) அனு, கோவிந்தராசு (திருச்செந்தூர்), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பஞ்சாயத்து செயலாளர் சுமதி தீர்மானங்களை வாசித்தார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசுகையில்’ பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றி தரப்படும். இங்குள்ள மக்கள் பிளாஸ்டிக்கை தவிர்த்து உள்ளனர். ஒருவரிடம் கூட பிளாஸ்டிக் பைகள் இல்லாதது பெரிதும் பாராட்டுக்குரியது. குப்பைகளை தினமும் அகற்றவும், 2 நாட்களுக்கு ஒரு முறை சீராக குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்’ என்று கூறினார்.

சிலை ஆய்வு

திருச்செந்தூர் தாசில்தார் தில்லைப்பாண்டி, பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் உமாசங்கர், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி, வேளாண்மை துறை இணை இயக்குனர் மகாதேவன், ஆழ்வார்திருநகரி யூனியன் ஆணையாளர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இலங்கை தமிழர்களுக்காக உயிர்நீத்த முத்துகுமாரின் சிலை, ஆத்தூர் அருகே கொழுவைநல்லூரில் உள்ளது. அந்த சிலையின் அருகில் இடப்பிரச்சினை தொடர்பாக சிலர் அடிக்கடி தகராறு செய்வதாக, மாவட்ட கலெக்டரிடம் அவருடைய பாட்டி முறையிட்டார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கொழுவைநல்லூரில் உள்ள அந்த சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Next Story