திருச்செந்தூர் அருகே குடியரசு தின விழாவை கிராம மக்கள் புறக்கணித்ததால் பரபரப்பு பள்ளிக்கூடத்தில் கல்வித்தரத்தை உயர்த்த கோரிக்கை


திருச்செந்தூர் அருகே குடியரசு தின விழாவை கிராம மக்கள் புறக்கணித்ததால் பரபரப்பு பள்ளிக்கூடத்தில் கல்வித்தரத்தை உயர்த்த கோரிக்கை
x
தினத்தந்தி 27 Jan 2019 3:30 AM IST (Updated: 27 Jan 2019 1:03 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே பள்ளிக்கூடத்தில் கல்வித்தரத்தை உயர்த்த வலியுறுத்தி, குடியரசு தின விழாவை கிராம மக்கள் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் அருகே பள்ளிக்கூடத்தில் கல்வித்தரத்தை உயர்த்த வலியுறுத்தி, குடியரசு தின விழாவை கிராம மக்கள் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியரசு தின விழா புறக்கணிப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கீழ நாலுமூலைக்கிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் நடப்பு கல்வி ஆண்டில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் சேர்ந்து உள்ளனர். எனினும் அந்த பள்ளிக்கூடத்தில் போதிய கல்வித்தரம் இல்லை என்றும், எனவே தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடமும், கல்வி அதிகாரிகளிடமும் கோரிக்கை மனு வழங்கினர்.

இந்த நிலையில் அந்த பள்ளிக்கூடத்தில் நேற்று குடியரசு தின விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, தலைமை ஆசிரியர், ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி, குடியரசு தின விழாவை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் மண்டல துணை தாசில்தார் கோபால், வட்டார கல்வி அலுவலர் சரசுவதி, கிராம நிர்வாக அலுவலர் வேலாயுதம் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், இதுகுறித்து சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து காலை 11 மணி அளவில் பள்ளிக்கூடத்தில் ஊர் தலைவர் சங்கரன் தலைமையில் தேசிய கொடியேற்றி, மரியாதை செலுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story