குடியரசு தினவிழா: கலெக்டர் நடராஜன் தேசிய கொடி ஏற்றினார் கிராம சபை கூட்டத்திலும் பங்கேற்பு


குடியரசு தினவிழா:  கலெக்டர் நடராஜன் தேசிய கொடி ஏற்றினார் கிராம சபை கூட்டத்திலும் பங்கேற்பு
x
தினத்தந்தி 27 Jan 2019 5:00 AM IST (Updated: 27 Jan 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

குடியரசு தின விழாவில் கலெக்டர் நடராஜன் தேசிய கொடி ஏற்றினார். பின்னர் கலெக்டர், கிராம சபை கூட்டத்திலும் பங்கேற்றார்.

மதுரை, 

மதுரை ஆயுதப்படை மைதானத்தில், 70–வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன், மதுரை சரக டி.ஜி.ஜி., பிரதீப்குமார், கூடுதல் கலெக்டர் எஸ்.பி.அம்ரித், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கலெக்டர் நடராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசார், ஊர்க்காவல்படை, தீயணைப்பு படை, தேசிய மாணவர் படை ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் 57 பேருக்கு ரூ.1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்த கலெக்டர், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள், அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

பின்னர் கேப்ரன்ஹால் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாப்புநாயக்கன்பட்டி எஸ்.கே.வி. மேல்நிலைப்பள்ளி, இ.எம்.ஜி. யாதவா பெண்கள் கல்லூரி, சிட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஹோலி ஏஞ்சல் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 765 மாணவ–மாணவிகள் கலந்து கொண்ட கலைநிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்றவர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

குடியரசு தினவிழாவை தொடர்ந்து மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செட்டிக்குளம் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் நடராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

மதுரை மாவட்டத்தில் 420 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. கிராம சபை கூட்டம் மூலம் கிராமத்திற்கு தேவையான திட்டங்களை தீர்மானங்கள் மூலம் நிறைவேற்ற ஒரு வாய்ப்பாகும். மேலும் அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை மக்களுக்கு தெரிவிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு.

அனைத்து பொதுமக்களும், பள்ளி குழந்தைகளும் கழிப்பறை வசதியினை முறையாக பயன்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சுகாதாரத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் என்பதனை உணர வேண்டும். சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். பாரம்பரிய உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மகளிர் திட்ட அலுவலர் மதுமதி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) செல்லத்துரை, துணை கலெக்டர் (பயிற்சி) கோட்டக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story