உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் பணி கேட்டு குவிந்த பட்டதாரிகள்


உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் பணி கேட்டு குவிந்த பட்டதாரிகள்
x
தினத்தந்தி 27 Jan 2019 4:30 AM IST (Updated: 27 Jan 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் பணி கேட்டு வேலையில்லா பட்டதாரிகள் குவிந்தனர். கைக்குழந்தைகளுடன் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

உத்தமபாளையம்,

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங் களை நடத்தினர். அந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாததால், கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வருவாய்த்துறை, கல்வித்துறை உள்பட அனைத்து துறை அலுவலகங் களிலும் பணிகள் முடங்கி உள்ளன.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் 2,184 ஆசிரியர்களில் 1,270 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு ஊழியர்களும் 50 சதவீதத்திற்கும் மேல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்த போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்றதால் பல பகுதிகளில் பள்ளிகள்மூடப்பட்டுள்ளன.

இதற்கிடையே மூடிக்கிடக்கும் பள்ளிகளை திறந்து வகுப்பு நடத்துவதற்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டது. இதற் காக தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. மேலும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் விருப்ப மனு அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி நேற்று உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு நூற்றுக்கணக் கான வேலையில்லாத பட்டதாரிகள் குவிந்தனர். ஆசிரியர் பட்டய படிப்பு முடித்தவர்கள், பி.எட். முடித்தவர்கள் ஏராளமானோர் குவிந்தனர். இதில் பெண்கள் பலரும் கைக்குழந்தைகளுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆசிரியர் பணி கேட்டு மனு எழுதி கொடுத்தனர். நேற்று மட்டும் ஒரே நாளில் 400 பேர் விருப்ப மனு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்தவர்களிடம் கேட்ட போது, ‘நாங்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம். தற்காலிகமாக வேலைகளை கொடுத்தால் மிக சிறப்பாக செய்வோம்’ என்றனர். 

Next Story