திண்டுக்கல்லில் டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு


திண்டுக்கல்லில் டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு
x
தினத்தந்தி 27 Jan 2019 4:30 AM IST (Updated: 27 Jan 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் இருந்து மொட்டணம்பட்டி செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை செயல்படுகிறது. நேற்று முன்தினம் இரவு மது விற்பனை முடிந்ததும், வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு விற்பனையாளர் சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை பூட்டுகள் உடைக்கப்பட்டு, அந்த டாஸ்மாக் கடை திறந்து கிடந்தது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது டாஸ்மாக் கடையில் இருந்த பணப்பெட்டி திறந்து கிடந்தது, பொருட்கள் சிதறி கிடந்தன.

இதைத் தொடர்ந்து கடையின் விற்பனையாளரை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கடையில் மதுபான பாட்டில்கள் இருப்பை சோதனை செய்தனர். அதில் 7 மதுபான பெட்டிகளை காணவில்லை. ஒவ்வொரு பெட்டியிலும் தலா 50 குவாட்டர் பாட்டில்கள் இருந்தன. அதனை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

அதேநேரத்தில் விற்பனை யாளர் நேற்று முன்தினம் விற்பனையான தொகையை எடுத்து சென்றதால், அது தப்பியது. நள்ளிரவில் ஆட்கள் நடமாட்டம் குறைந்ததும், மர்ம கும்பல் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்துள்ளனர். பின்னர் பணம் எதுவும் இல்லாததால், மதுபாட்டில்களை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு யாகப்பன்பட்டி, கொடைரோடு பகுதிகளில் டாஸ்மாக் கடையில் திருட்டு நடந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story