பழனி முருகன் கோவிலில் குவிந்த எடப்பாடி பக்தர்கள் மயில், இளநீர் காவடி எடுத்து நேர்த்திக்கடன்


பழனி முருகன் கோவிலில் குவிந்த எடப்பாடி பக்தர்கள் மயில், இளநீர் காவடி எடுத்து நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 27 Jan 2019 4:00 AM IST (Updated: 27 Jan 2019 2:28 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் நேற்று எடப்பாடி பக்தர்கள் குவிந்தனர். மயில், இளநீர் காவடிகளை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பழனி,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடந்த இந்த திருவிழா கடந்த 24-ந்தேதியுடன் நிறைவடைந்தது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழாவுக்காக சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த ஸ்ரீபருவத ராஜகுல சமுதாய மக்கள் பழனிக்கு வருவது வழக்கம்.

கடந்த 360 ஆண்டுகளுக்கும் மேல் இவர்கள் தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனிக்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மயில், தீர்த்தம் மற்றும் இளநீர் காவடிகளுடன் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதன்படி தைப்பூச திருவிழாவுக்காக கடந்த 20-ந்தேதி எடப்பாடியில் உள்ள செல்லியாண்டியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

நேற்று முன்தினம் இரவு பழனியை அடுத்த நரிக்கல்பட்டிக்கு இவர்கள் வந்தனர். அங்குள்ள ஒரு மடத்தில் இரவில் தங்கினர். பின்னர் நேற்று காலை மானூர் சண்முகநதிக்கு வந்த எடப்பாடி பக்தர்கள் காவடிகளுக்கு மகாபூஜை நடத்திவிட்டு பிற்பகலில் பழனி வந்தனர். தொடர்ந்து பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்த அவர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் காவடிகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது. அதையடுத்து நான்குரத வீதிகளில் எடப்பாடி பக்தர்கள் காவடிகளுடன் ஊர்வலமாக வந்து பெரியகடை வீதி, காந்தி ரோடு, அடிவாரம் ரோடு, சன்னதி வீதி வழியாக மலைக்கோவிலுக்கு வந்தனர்.

பின்னர் படிப்பாதை மூலம் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் அங்கு காவடிகளை நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு, உச்சிக்கால பூஜை, அன்னதானம், சாயரட்சை கட்டளை பூஜை, தங்கரத புறப்பாட்டில் கலந்துகொண்டு பழனியாண்டவரை வழிபட்டனர். அதன் பின்னர் ராக்கால கட்டளை பூஜையில் கலந்து கொண்டு அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு முழுவதும் மலைக்கோவிலில் தங்கி வழிபாடு நடத்தினர். பழனி மலைக்கோவிலில் இரவு முழுவதும் தங்கும் உரிமை இவர்களுக்கு மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக எடப்பாடி பக்தர்களுக்காக மலைக்கோவிலில் சுமார் 20 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டிருந்தது. பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்த பின்னர் எடப்பாடி பக்தர்கள் தங்களுக்குள் அந்த பிரசாதத்தை பகிர்ந்துகொண்டு சாப்பிட்டனர். எடப்பாடி பக்தர்கள் வருகையால் பழனிமலைக்கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பழனி மலைக்கோவிலில் வழிபாடு நடத்திய எடப்பாடி பக்தர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 3 நாட்கள் பழனியில் உள்ள சமுதாய மடத்தில் தங்குகின்றனர். பின்னர் 30-ந் தேதி (புதன்கிழமை) பழனியில் இருந்து பாதயாத் திரையாக புறப்பட்டு 3-ந்தேதி எடப்பாடிக்கு சென்றடைவார்கள். எடப்பாடி பக்தர்கள் வருகையை தொடர்ந்து சேலம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பழனியில் இருந்து சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு 40-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

Next Story