உப்பளம் மைதானத்தில் கவர்னர் கிரண்பெடி தேசியக்கொடி ஏற்றினார்


உப்பளம் மைதானத்தில் கவர்னர் கிரண்பெடி தேசியக்கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 27 Jan 2019 4:30 AM IST (Updated: 27 Jan 2019 4:15 AM IST)
t-max-icont-min-icon

உப்பளம் மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் கவர்னர் கிரண்பெடி தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் குடியரசு தினவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதையொட்டி கடந்த சில நாட்களாக உப்பளம் மைதானத்தில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் ஒத்திகை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று அங்கு குடியரசு தினவிழா நடந்தது. விழா மைதானத்துக்கு காலை 8.29 மணிக்கு கவர்னர் கிரண்பெடி வந்தார்.

அவரை தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா ஆகியோர் வரவேற்று அழைத்து வந்தனர். நேராக விழா மேடைக்கு வந்த கவர்னர் கிரண்பெடி அங்கு தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசியகீதம் இசைத்தனர்.

அதன்பின் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பினை கவர்னர் கிரண்பெடி பார்வையிட்டார். தொடர்ந்து மேடைக்கு திரும்பிய அவர் அரசு பொதுத்தேர்வுகளில் சாதனைபடைத்த பள்ளிகள், சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு விருதுகளை வழங்கினார்.

அதன்பின் காவல்துறை, காவல்படை அல்லாதோர், தேசிய மாணவவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், சமுதாய நலப்பணித்திட்டம், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. விழா மேடையில் நின்றவாறு அணிவகுப்பு மரியாதையை கவர்னர் கிரண்பெடி ஏற்றுக்கொண்டார்.

பின்னர் அரசுத்துறைகளின் சாதனையை விளக்கும் வகையில் அலங்கார வண்டிகளின் அணிவகுப்பும், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. பின்னர் சிறந்த அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகள் நடத்தியவர்களுக்கு கவர்னர் கிரண்பெடி பரிசு வழங்கினார். இறுதியாக தேசியகீதத்துடன் விழா நிறைவடைந்தது.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், துணை சபநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் சிவா, ஜெயமூர்த்தி, நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி மற்றும் அரசுத்துறை செயலாளர்கள், இயக்குனர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

உப்பளம் மைதானத்தில் விழா முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சட்ட சபைக்கு வந்தனர். அங்கு நடந்த குடியரசு தின விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தி போலீசாரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சபாநாயகர் வைத்திலிங்கம், துணை சபாநாயகர் சிவக் கொழுந்து, மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் சட்டசபை முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Next Story